Monday 21 May 2018

கவிதை கணேசன் - தொல் பொருள் சேவா செம்மல் விருது .

தொல் பொருள் சேவா செம்மல் விருது .

கவிதை கணேசன் அவர்களுக்கு


பண்ணுருட்டி பகுதியில்  அநேகமாக கவிதைகணேசனை அனைவரும் அறிந்திருப்பர் .இவரைப் பற்றிய செய்திகள் நாளேடுகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அடிக்கடிவருவதை பார்த்திருக்கலாம் .

இவர் எங்கள் பள்ளியில் பணியாற்றிய N C C அலுவலர் திரு பாலச்  சந்தர் மூலம்தான் எனக்கு அறிமுகம் .அவருடைய வகுப்புத் தோழர் .சமவயதினர் . ஆனால் தோற்றத்திலோ மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் .

கவிதை கணேசன் அய்யா முதல் சந்திப்பிலேயே எனக்குள் பிரம்மிப்பை ஏற்படுத்தியவர் .ஓய்வுபெற்ற பின்னரும் இவ்வளவு சுறுசுறுப்பாய் ஆர்வமாய் பயணங்களுக்கு அசராத ஒரு மனிதரை பார்ப்பது மிக அபூர்வம் .

பண்ணுருட்டில் தற்போது முத்தையா நகரில் வசித்து வருகிறார்.
 பெற்றோர் .ஜானகிராமன் & ஜெயலட்சுமி .பண்ணுருட்டி அரசுமேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் .உணவுத் தரக்  கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் .

பழங்கால பொருட்கள் ..சில நேரங்களில் நாம் கேள்விப்பட்டிராத, பார்த்தேயிராத பொருட்டாகள் ,அருங்காட்சியகங்களில் கூடக் கணக்கு கிடைக்காத பொருட்கள் என பல அபூர்வ பொருட்கள் இவரது சேகரிப்பில் உண்டு . பழங்கால நாணயங்கள் ,வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள் ,வரிசையாக 100 எண்கள் கொண்ட ரூபாய் நோட்டுக்கள் என பணத்தில்
இத்தனை வகைகளா என நம் விழிகள் வியப்பில் விரியும் .( ஒவ்வொரு முறை இவற்றைக் காட்சிப் படுத்தும்போதும் பார்வையாளர்கள் சில பல ரூபாய் நோட்டுக்களை லபக்கிக்கொள்வது இவருக்கு வருத்தம்தான் ... எவ்வளவுதான் கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்தாலும் களவு போவதை தவிர்க்க இயலவில்லை என்கிறார் சற்றே வருத்தத்துடன் .)

பிரபல வி ஐ பி க்களிடம் இருந்து இவர் சேகரித்திருக்கின்ற கடிதங்கள் , கையெழுத்துக்கள் தனி கலெக்ஷனில் ....

முத்தாய்ப்பாக

500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்வகைகள் , 300க்கும் மேற்பட்ட பலவிதமான பாரம்பரிய விதைகள் இவரது சேகரிப்பில் உண்டு .

இவற்றை சேகரித்து வைத்திருப்பது மட்டுமல்ல இந்தியாவெங்கும் அலைந்து திரிந்து அவற்றை பொதுமக்களுக்கு காட்சிப் படுத்திவருவதுதான் இவரது சிறப்பு .

விவசாயக் கல்லூரிகளுக்கு விருந்தினர் விரிவுரையாளராகப் போய் மாணவர்களுக்கு நமது பாரம்பரிய தாவரங்கள் , விதைகள் குறித்து விரிவுரையாற்றிவருகிறார் .

தான் செல்லும் , பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்து வீடியோப்படங்கள் எடுத்துத் தானே அவற்றை எடிட் செய்து யு டியூப் சென்று தனக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் தொடர்ந்து பதிவுகள் இட்டுவருவதோடு இவ்வளவு பணிகளுக்கு இடையில் சமூக வளைத்த தளங்களிலும் சிறப்பாக இயங்கி வருகிறார் .

தனது  வீட்டில் விதம் விதமான தாவரங்களை வளர்த்துவருகிறார் .
நம் சூழலுக்கே ஒத்து வராத ஆப்பிள் ,திருவோடு மரங்களையும் கூட வளர்த்துவருகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் .திருவோடு மரத்தில் காய்க்கும் திருவோட்டுக் காய்களை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கேள்விப்பட்டு வந்து ஆர்வத்தோடு பார்த்தும் இலவசமாக பெற்றும் சென்றுவருகின்றனர் .( முன்கூட்டியே பதிவு செய்திருக்கவேண்டும் .)

சமீபத்தில் டெல்லியில் நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரம்பரிய விதைகள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்டு வந்திருப்பது இவரது சிறப்பு .

பல்வேறு அமைப்புகள் இவரைப் பாராட்டி பல்வேறு விருதுகளை வழங்கிவருகின்றன . அவ்வகையில் குறிப்பிடத்தகுந்தது இவர் பெற்றுள்ள நம்மாழ்வார் விருது .

இவரை மேலும் சிறப்பிக்கும் விதமாக எங்கள் ஸ்வாசிகா இயக்கம் இவரது சிறந்த சேவையினைப் பாராட்டி ஸ்வாசிக்காவின் பெருமைமிகு விருதான தொல் பொருள் சேவா செம்மல் என்ற விருதை வழங்கிப் பாராட்டினோம்.

இவர் தனது சேவைப் பயணத்தைத் தொடரவும் ,மேலும் பல சிறப்புகள் பெறவும் வாழ்த்தி மகிழ்கின்றோம் .

சாதனைகள் புரிய முதுமை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து பம்பரமாய் சுழன்று வாழ்ந்துகொண்டிருக்கும் கவிதை கணேசன் அய்யாவை நீங்களும் வாழ்த்தலாமே !






















No comments:

Post a Comment