Friday 18 May 2018

செல்வன் திருக்காமேஸ்வரன்

செல்வன் திருக்காமேஸ்வரன் .( சைவத் திருமுறை சேவா ரத்னா )

யார் இந்த திருக்காமேஸ்வரன் ?

நான் இவனை சந்தித்தது எப்படி?


பண்ணுருட்டி செந்தமிழ் சங்கத்தின் தலைவரும் எனது நண்பருமான சுந்தர பழனியப்பன் அவர்களின் தந்தையார் திரு சுந்தரம் தாயார் திருமதி சகுந்தலா ( இவர்கள் ஒருவகையில் எங்கள் உறவினர்கள் கூட)இவர்களின் 80 அகவைப் பூர்த்தியைமுன்னிட்டு சதாபிஷேகம் அண்மையில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது .அதையொட்டி ஆசிவழங்கும் நிகழ்வு கோவிலின் எதிரேயுள்ள S.வ .திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

நானும் என் மனைவியும் மண்டபத்தின் வாயிலில் நுழைகின்றோம் .சற்று
முன்னர் ஒரு தேவ கானம் கேட்டதே என்கிற மாதிரி ஒரு தெவீக குரல் ஒலிப்பெருக்கி வழியே வழிந்துகொண்டிருந்தது .ஆர்வத்துடன் உள்ளே சென்றோம் ...

அங்கே மேடையி ஒரு சிறு பாலகன் காவி தரித்து ருத்ராட்ச மாலைகள் அணிந்து நெற்றியில் உடலிலும் திரு நீறு துலங்க சாட்ஸ்சாத் அந்த திருஞான சம்பந்தர் மீண்டும் ஒரு திரு அவதாரம் புரிந்தாற்போல் அமர்ந்து தேவகானம்  புரிந்து சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தான் .நான் வைத்த கண்  வாங்காமல் அவனையே பார்த்த வண்ணம் அவன் குரலினிமையில் மயங்கித்தான் போனேன் ...நான் மட்டுமல்ல ...அங்கிருந்தோர் அநேகமாக அனைவருமே அவன் மழலை இசையில் சொக்கிப் போயிருந்தனர் .நிகழ்வு முடிந்ததும் மேடைக்கே சென்று அவனை வாழ்த்தினேன்.

பின்னர் விசேஷம் முடிந்து மண்டபத்திற்கு வெளியே சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தபோது அவனும் அவன் தந்தையாரும் திருவதிகை வீரட்டானேஸ்வரரை தரிசித்துவித்து மீண்டும் மண்டப வாயிலை நோக்கி வந்துகொண்டிருந்தனர் .அப்போது அவனை அருகில் அழைத்து அவனைப் பற்றி வினவினேன் .தன்னைப் பற்றியும் தான் படிக்கும் வகுப்பு பற்றியும் தெரிவித்தான் . அப்போதே தீர்மானித்துக் கொண்டேன் .எங்கள் இயக்கம் நடத்தும் அடுத்த விழாவில் இச்சிறுவனை கௌரவிக்கவேண்டும் என்று . அவனை வாஞ்சையோடு அணைத்து இன்னும் நன்றாக வளர வாழ்த்தி அவனிடம் எனது விசிட்டிங் கார்டு ஒன்றையும் அளித்தேன் . பெற்றுக்கொண்ட அவன் உடனே தனது தந்தையிடம் அதனைத் தர ,அவர் பதிலாக கொடுத்த அவனது விசிட்டிங் கார்டை வாங்கி வந்து என்னிடம் அளித்தான் .இதுதான் நான் அவனை முதலில் சந்தித்த நிகழ்வு ..

இனி திருக்காமேஸ்வரனைப் பற்றி ...

புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த திரு ஆனந்தன் -திருமதி சங்கீதா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவன் செல்வன் திருக்காமேஸ்வரன் .
2009  வருடம் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று பிறந்தவன் .புதுச்சேரி அமிர்தா வித்யாலயாவில் 4 ஆம்  படித்து வருகிறான் .

தனது 4 ஆம் வயதிலேயே மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உள்ள சிவபுராணத்தை இசையோடு பாடி குழந்தை சாதனையாளர் என்னும்  முதல் விருதினைப் பெற்றான் .

அன்று  துவங்கிய இவனது இறைப்  பயணமானது  இன்று  வரை தொடர்கிறது .இதுவரை  150 க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை தமிழகம்,கேரளம் ,கர்நாடகம் ,ஆந்திரம்  என பல மாநிலங்கள் கடந்து  வெளிநாடுகளில் கூட நிகழ்த்தியுள்ளான் .

விகடன் குழும வெளியீடான சக்தி விகடன் தனது கவர் ஸ்டோரியில் இவனைப் பற்றிக் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்துள்ளது ..

தினத்தந்தி டிவி தொடங்கி தினமலர் இணையம் வரை இவனது சாதனைகளை பற்றிய செய்தித்தொகுப்பு - ஆவணப் படங்களை ஒளிபரப்பு செய்துள்ளன.

இவனை வாழும் திருஞான சம்பந்தன் என்றே வர்ணித்துள்ளன.

இது வரை எந்த குருவிடமும் சென்று இசை பயிலாமல் சுயம்புவாகவே வளர்ந்து பெற்றோரின் வழிகாட்டல் மட்டுமே துணையாகக் கொண்டு தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடரும் திருக்காமேஸ்வரன் ,தந்து நிகழ்வுகள் மூலம் கிடைத்த  அனைத்தையும் திருக்கோயில்களில் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கும் ,ஊனமுற்றோர் உதவிக்கும் ,பொதுத்தொண்டுக்குமே செலவிட்டு வருவதும் பாராட்டுக்கு உரியது .

இவனது இறைதொண்டொடு கலந்த பொதுத்தொண்டைக் கேள்வியுற்ற புதுவை ஆளுநர் மேதகு கிரண்பேடி முதல் பல தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் வரை இவனைப் பாராட்டி 15  க்கும் மேற்பட்ட விருதுகளை அளித்து சிறப்பு செய்துள்ளனர் .

இச் சாதனை சிறுவனைப் பாராட்டி எங்கள் ஸ்வாசிகா இயக்கம் இவனுக்கு சைவத் திருமுறை சேவா ரத்னா என்னும் பெருமை மிகு விருதினை வழங்கி மகிழ்கின்றது .இவ் இவ்விருதினை இவனுக்கு அளிப்பதன் மூலம் எங்கள் ஸ்வாசிகா இயக்கம் பெருமை கொள்கிறது .

இச் சிறுவன் தனது பாதையில் மேலும் பல சாதனைகள் புரியவும் ,சிறப்புகள் பெறவும் எங்கள் இயக்கம் வாழ்த்தி மகிழ்கிறது

முக்கியமான குறிப்பு .:
இவனது ஆன்மீக சாதனைகளைக் கண்ட சென்னை அன்பர் ஒருவர் தனது சொந்த செலவில் இவனையும் இவன் தந்தையையும் திருகி கயிலாய யாத்திரைக்கு அழைத்து சென்றுள்ளார் .விருது வழங்கும் விழா நாளில் இச் சாதனை சிறுவன் திருகி கயிலாய யாத்திரையில் இருந்ததனால் அவ்விருதை அவனது தாயார் திருமதி சங்கீதா அவர்கள் பெற்றுக் கொண்டு ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயானார் .

கயிலாய யாத்திரை முடிந்ததும் திருக்காமேஸ்வரன் தனது தந்தையுடன் வருகைதந்து ஸ்வாசிகா இயக்கத்தின் பொறுப்பாளர்களை ,உறுப்பினர்களை சந்திப்பான் என்று மகிழ்வுடன்கூறிச் சென்றுள்ளார் சாதனைச் சிறுவனின் தாய் .

சினிமாப் பாடல்களையும் ,குத்துப்பாட்டையும் சேட்டையுடன் பாடி ஆடுகின்ற இன்றைய சிறார் ,மாணவர்களிடையே ...திருக்காமேஸ்வரன் அபூர்வ சிறுவன்தான் ...இல்லையா ? நன்கு தேடுவோம்.. நம் வீட்டு மழலைகளிடம் கூட இப்படி ஏதேனும் அற்புதத் திறமைகள் ஒளிந்திருக்கும் ...தேடுவோம் ..வெளிக்கொணர்வோம் ...உலகம் முழுமைக்கும் தெரியவைப்போம் ...!

இதோ இங்கு நீங்கள் காணும் கயிலாய விண்ணப் படங்கள் கூட 18-05-2018 அன்று இரவு திருக்காமேஸ்வரனின் தந்தை கட்செவி அஞ்சல் மூலம் எனக்கு அனுப்பியவையே ...

திருக்காமேஸ்வரன் ...சீக்கிரம் வா ...உன் தாய் உனக்காகக் காத்திருப்பதை போலவே நாங்களும் காத்திருக்கிறோம் .!
















No comments:

Post a Comment