Tuesday 29 May 2018

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் V S பொது மக்கள்


அரசுப்  பள்ளி ஆசிரியர்கள்   V S    பொது மக்கள்

அது என்ன மாயமோ தெரியல மந்திரமோ தெரியல ...
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பார்களே அதைப்போல பொதுமக்கள் எல்லோருக்குமே
ஆசிரியர்கள் என்றாலே சற்று இளப்பமாகத்தான் இருக்கும் போல !

அரசுப்  பள்ளிகள் சரியில்லை .
இதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்ற அசட்டு எண்ணம் மக்களின் மனதை ஆட்டிப் படைக்கிறது .அதுவும் சமீப காலங்களில் சமூக
வலை த்தளங்களில் அதிகமாக  வறுபடுவது அரசுப்  பள்ளி  ஆசிரியர்களாகத்தான் இருக்கிறார்கள் .

அதற்கு அவர்கள் முன் வைக்கும் ஒரே காரணம் அரசுப்  பள்ளி  ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதுதான்  என்பதே .

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தம் மீதே அதாவது தம் கற்பித்தல் திறன் மீதே நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் அவர்கள் தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்களாம் ...!

அவர்கள் அத்தனைபேரும் தம் பிள்ளைகளை அரசுப்  பள்ளிகளில் சேர்த்துவிட்டால் அடுத்தகணமே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாயாஜாலம் போல அனைத்து அரசுப்  பள்ளிகளுமே ஆக்ஸ்போர்டு கல்வி நிலையங்களுக்கு ஈடாகிவிடுமாம் .எப்படி இருக்கிறது கூத்து ?

இதற்கு முக நூலில் வந்த பதிவிற்க்குப் பின்னூட்டம் வந்தது இப்படி ...!

"அரசுப்  பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை  அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் .அப்படி இல்லையெனில் அவர்களது பணி பறிக்கப் பட வேண்டும் "

அனைத்து  அரசுப்  பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பிடிக்கவில்லையென்றால் அவர்களின் பணியை பறிப்பது வரவேற்கத் தக்கதே ...அதற்கு முன்னர் ஒரு  வெள்ளோட்டம் போல இப்படிச் செய்தால் என்ன ?

அதாவது  ஆசிரியர்கள் கிடக்கட்டும் ஒருபுறம் ...அவர்கள் கீழ் மட்டப் பணியாளர்கள்தானே !

இவர்களுக்கெல்லாம் வழிகாட்டிகளாகவும் ,முன்னோடிகளாகவும் ,படியாளப்பவர்களாகவும் ,கலங்கரை விளக்கங்களாகவும் திகழ்கின்ற உயர்மட்ட அதிகாரிகள்,பதவியாளர்கள் ,பெருந்தலைகள் இருக்கிறார்களே

அவர்களிடம் செல்வோமா முதலில் ?

அந்த முக நூல் பதிவாளர் சொன்ன திட்டத்தை முதலில் இவர்களிடத்தில் செயல்படுத்திப் பார்ப்போம் ....திட்டம் வெற்றி பெற்றால் அதை பார்த்து அரச பள்ளி ஆசிரியர்கள் " ஆஹா நம் வழிகாட்டிகள் தமது வாரிசுகளை அதாவது தம் மகனை அல்லது மகளை அல்லது மகன் வழிப் பேரன் பேத்திகளை அல்லது மகள் வழிப் பேரன் பேத்திகளை அரசுப்  பள்ளியில் சேர்க்கும் போது நாம் மட்டும் ஏன் நமது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் ? என்று உணர்ந்து ...வெட்கி ...தம் பிள்ளைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிடுவார்கள் அல்லவா ?
டீலா ? நோ டீலா ?

டீல் என்னவென்று பார்த்துவிடுவோமா?

அதாவது 

முதல்வர் வீட்டு வாரிசுகள் 
கல்வி இயக்குனர் வீட்டு வாரிசுகள் ...
அமைச்சர்கள் வீட்டு வாரிசுகள் ...
ஆட்சியர் வீட்டு வாரிசுகள் ...
பா ம உ க்கள் வீட்டு வாரிசுகள் ...
ச ம உ   க்கள் வீட்டு வாரிசுகள்.... 
முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் வீட்டு வாரிசுகள் 

இவர்கள் எல்லாம் கூட அரசுப்  பள்ளியில்  படிப்பதுதான் 
நியாயம் இல்லையா ?

அரசு கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிரியர்கள் வீட்டு வாரிசுகள் அரசுப் பள்ளிகளிலும் அரசுக் கல்லூரிகளிலும்தான் படிக்கிறார்களா/

நீதிபதிகள் ,தாசில்தார்கள்  ,வருவாய் அலுவலர்கள் ,பதிவாளர்கள் ,காவல்துறையினர் ...இன்ன பிற அரசு ஊழியர்களின் வாரிசுகள்
( அதாவது பிள்ளைகள் அல்லது பேரப் பிள்ளைகள் ) நிச்சயம் அரச பள்ளியில்தான் படிக்கிறார்களா?


அப்படி இல்லையாயின் அவர்களது பதவி 
அல்லது பணிகள் பறிக்கப் படலாமா ?

முக நூலில் மேதாவித்  தனமாக பதிவிடும் நண்பர்களே ...!
முதலில் தங்களது பிள்ளைகள் அரசுப்  பள்ளியில்தான் படிக்கிறார்களா?

தமிழ் நாடு அரசுப்  பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழியாக இருந்தால் போதாதா ?

ஆங்கில மீடியம் எதற்கு ?

ஏன் ஒவ்வொரு அரசுப்  பள்ளியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை எல்லாம் அவர்களின் உயர் கல்விக்கு உதவுகிறேன் பேர்வழி என்று அரசே அவர்களை வலுக்கட்டாயமாக அருகாமை மாவட்டத்தில் உள்ள பெரும் கல்விக் கொள்ளை பள்ளிகளில் சேர்த்து அதற்குப் பணமும் செலவழிக்கிறதே ? இதுவரையிலும் அம்மாணவன் அரசுப் பள்ளியில் பயின்றுதானே ...அரச பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களிடம்தானே கல்வி கற்று அவ்வளவு உயர்ந்த மதிப்பெண்ணை பெற்றான் ...இப்போது அரசுக்கு அப்பள்ளி ஆசிரியர்களிடம் நம்பிக்கை போய் விட்டதா என்ன ?

( எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பில்  460 ,470 ,475 ,477 என்று மிக நல்ல மதிப்பெண்கள் பெற்ற  மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலைக் கல்வியை எங்கள் பள்ளியில் படிக்கவேயில்லை தெரியுமா?
அவர்கள் எல்லாரும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தயவில் அருகமை மாவட்டத்தின் A K T , மற்றும்  மவுண்ட் பார்க்  பிரபலப் பள்ளிகளில் படிக்கச் சென்றுவிடுகிறார்கள் ..அப்படி சீராகி செல்லும் மாணவர்களிடம் பக்குவமாகப் பேசி அவர்களது பெற்றோர்களையும் ஒரு வழியாக சரிக்கட்டி எங்கள் பள்ளியிலேயே படிக்க வைக்க சம்மதிக்க வைத்தால் ...உடனே தொலைபேசியில் அழைத்து அவர்களை வசவு மாரி பொழிந்து வேரோடு பிடுங்கி அங்கே நட்டுவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள் நம் அதிகாரிகள் )

என்ன நடக்கிறது இங்கே இடையில்?

அது ஒரு புறம் இருக்கட்டும் ...ஏற்கெனவே இங்கே சமுதாயத்தில் பெற்றோர்களுக்கு ஆங்கிலப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மோகம் ஆட்டி வைக்கிறது ...தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரச பள்ளி ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று கேன்வாஸ் செய்து மாணவர்களை தொடக்கப் பள்ளியில் சேர்க்கும் நிலைமை .இந்த லட்சணத்தில் 25% இட  ஒதுக்கீடு என்ற பேரில் இருக்கும் சொற்ப மாணவர்களையும் தனியார் பள்ளிகளுக்கே தாரை வார்க்கும் அரசாங்கத்தை எங்கேனும் கண்டதுண்டா ?

இப்படி மதிப்பெண் மோகம் காட்டி தனியார் பள்ளிகள் ஒருபுறம் மாணவர்களை தம் பக்கம் இழுக்க ...மறுபுறமோ சற்றும் லஜ்ஜை இல்லாத அரசு ( அதிகாரிகள்?!) 25% கட்டையாக கல்வி உரிமைச்சட்டத்தின் பேரில்  தனியார் கல்விநிலையங்களை நோக்கி மாணவர்களை துரத்த ...

மாணவர் சேர்க்கை குறைந்ததால் காற்றோடிப் போன வகுப்பறைகளை , பள்ளிகளைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடவும் அருகாமைப் பள்ளிகளில் ஒருங்கிணைத்து ஆசிரியர்களின் பிழைப்பில் மண்ணைப் போடும்  அரசை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

இந்த லட்சணத்தில் அரச பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தால் ஆசிரியர்கள் மேல் நடவடிக்கையாம் ...
 சும்மாவா சொன்னார்கள் ...?
 'நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு எட்டு ஆடு கேட்குமாம் ' என்று ?




ஏன் தனியார் பள்ளிகள் அத்தனையையும் இழுத்து மூடிவிட்டு  அவற்றை எல்லாம் அரசுப்  பள்ளிகளோடு இணைத்துவிடக் கூடாது ?

அப்பொழுது அரச பள்ளி ஆசிரியர்கள் வேறு வழியே இல்லாமல் தம் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் மட்டுமே சேர்ப்பார்கள் அல்லவா?

ஆலோசிக்கலாமே நண்பரே ...!

நான் அரசுப் பள்ளி ஆசிரியர்தான் ...
எனக்கு ஆண்டவன் அருளால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை 

பிறந்தால் நான் மனசாட்சிப்படி நிச்சயம் அரசுப்  பள்ளியில்தான் சேர்ப்பேன் 

சரியா?






No comments:

Post a Comment