Thursday 17 May 2018

நானும் பால குமாரனும்

நானும் பால குமாரனும்





பால குமாரன் ...
எனக்குப் பிடித்த ஆறெழுத்து மந்திரச் சொல் ...!
என் பதின்வயது வாசக தளத்தை மற்றொரு தளத்திற்கு கொண்டு  சென்றவர் .
 நான் முதன்முதலாய் அவரை வாசித்தது ஆசைக் கடல் நாவலில் தான் ...மூழ்கிவிட்டேன் முழுதுமாய் அவரது எழுத்து நடையில் ...!
இரும்புக்குதிரைகள் ஏறிப் பறந்தேன்  ,
மெர்குரிப்பூக்கள்  பறித்தேன் ...
ஆனந்த வயலில் அறுவடை செய்தேன் ...!
கனவுகள் விற்பவனிடத்து கனவுகள் யாசித்தேன் ...
இன்னும் இன்னும் ...எழுத இருக்கிறது ...
உடையார் வாசிக்கும்போது கால எந்திரத்தில்  அவரோடு சேர்ந்து
சரித்திரக் காலத்தில் பயணப்பட்டு
ராஜ ராஜனோடு வாழ்ந்த அனுபவமும்
பெரிய கோவில் கட்ட கல்சுமந்தவர்களுள்
நானும் இருந்ததாய் உணரச் செய்த பாங்கும் ...
பதின் பருவமே ஒவ்வொருவருக்கும் கனாக் காலம்தான் ..
எனக்கு மட்டும்
அந்தக் கனவை வாச மலர் பூக்கும் ...
வண்ணத்துப் பூச்சிகள் நட்சத்திரங்கள் சுமந்து பறக்கும்
சொர்க்கபுரி வசந்த வனமாக்கியது
உனது எழுத்துக்களின்மீதான நான் கொண்ட நேசமும் .
உனது படைப்புகளின் மீதான எனது தொடர் வாசிப்பும் அல்லவா ?
எங்கள் ஊரில் எனது நண்பன் ரவி , கிரி ,.....என
ஒரு சங்கிலியாக உனக்கான ஒரு வாசகர்  வட்டமும்  உண்டு ..
உன் நாவல் வரும்போதெல்லாம் வெறிபிடித்தார் போல்
உன் கதைகள் வாசித்து பின்
அதுபற்றி விவாதிப்பில் மூழ்குவதேல்லாம்
ஒரு இனிய பிற்சேர்க்கை
என் குடும்பத்தில் எனது அக்காவும் கூட உனது தீவிர வாசகிதான் .
உன் நாவலை வாசிக்கும் யாரும் புதிதாய் ஒரு தொழிலை கற்றுக்கொள்ளலாம்போல் இருக்கும் ...!
ஏதேனும் ஒரு செய்தியை ...ஒரு கலையை
உன் படைப்பு முழுக்க பூஜை அறை சுகந்தமாய் வியாபிக்கச் செய்துவிடுவாய் அல்லவா...?


நீ இறந்து போனதாக கேள்விப்பட்டு நெஞ்சம் பதறியதும் ,
விழிகளுக்கு நீர் திரையிட்டதும் நிஜம் ...
ஆனால் என் புத்தி சொல்கிறது ...உமக்கு ...உம் போன்ற
காலத்தை சிறை  பிடித்து காகிதத்தில் அடைத்த எழுத்தாளர்கள்
ஒரு பொழுதும் மரணிப்பதில்லை...
ராஜ ராஜ சோழன் தான் கட்டிய கற்கோயிலில் ஜீவித்திருக்கிறான்  இன்னமும் ...
நீயோ உனது எழுத்துக்களின் நடைகளில் கம்பீரம் காட்டி
தோழமையுடன் புன்னகைத்து
நித்தமும் எங்கள் விழிகளில் வசித்திருப்பாய் ...உன் நாவல்கள் விலை அதிகமாக இருக்கும்போது
எங்கள் கரங்களில்  பாக்கெட் நாவலில் மலிவு விலைப்  பதிப்பாய் தவழ்வாயே ...மறக்கமுடியுமா ?
என் இல்ல நூலகத்தில் புத்தக அலமாரியில்
உனது படைப்புகளால் நிரம்பி வரிசையாக அமர்ந்துள்ளாயே ...!
உன்னை என் விரல்கள் வருடுகின்றன ...
நீ வாழ்ந்த காலத்தில் வாழுகின்ற பெருமைதனை
எண்ணி நெஞ்சம் விம்முகிறது.
உன்னோடு அளவளாவுகிறேன் ஒரு வாசகனாய்
நீ எழுதிய படைப்புகள் மூலமாய் ...
போயிட்டு  வாங்க பாலகுமாரன் ...
அப்படின்னு சொல்லி வழி அனுப்பத் தயாராயில்லை நான் ..!
என்னுடனே நீ இரு ...பேசு ...மகிழ் ... மகிழ்வளி ...புத்தக ரூபத்தில் !




No comments:

Post a Comment