Thursday 10 May 2018

23 ஆவது இலவச ஓவியப் பயிற்சி முகாம் நிறைவு விழா


       நாங்கள் நடத்திய இம்முகாமைப் பற்றி பதிவிடவேண்டுமெனில் தொலைகாட்சி நெடுந்தொடர் போலாகிவிடும் .விருதுபெற்ற சாதனையாளர்கள் குறித்த  விரிவான பதிவு இனி வரும் நாட்களில் ...

எனவே நிறைவு விழா குறித்த


ஸ்வாசிகாவின் கோடைக்கால இலவச ஓவியப்  பயிற்சி முகாம் நிறைவு விழா

           ஸ்வாசிகா இயக்கம் கடந்த 23 வருடங்களாக கோடைக்கு காலத்தின் பொது மே -1 முதல்  மே -10 வரை ஓவிய பயிற்சிமுகாமை நடத்திவருகிறது .ஸ்வாசிகா இயக்கம் பத்து நாட்கள் நடத்திய ஓவிய பயிற்சி முகாம் நிறைவு விழா 10-05-2018 அன்று பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது .நிகழ்வுக்கு  பள்ளியின் தலைமை ஆசிரியர் பூவராக மூர்த்தி அவர்கள் இப் பொன்னான விழாவுக்குத் தலைமை தாங்கி குத்துவிளக்கின் ஒரு முகத்தை ஒளியூட்ட ,திருமதி புவனேஸ்வரி முத்துக்குமரன் , திருமதி விஜய லட்சுமி  கவிதை கணேசன் ,திருமதி காயத்ரி சுரேஷ் குமார் ,திருமதி சங்கீதா ஆனந்தன் ஆகியோர் மற்ற முகங்களை ஒளியூட்டி   விழாவை மங்களகரமாக துவக்கி வைத்தனர். முகாமில் பங்கேற்று மாணவர்களுடன் மாணவராக ஓவிய பயிற்சி பெற்ற பகுதி நேர ஓவிய ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாட விழா இனிது துவங்கியது பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.
       
         சக்தி ஐ டி  ஐ  தாளாளர் சந்திரசேகர் அவர்கள் ஓவியக் கண்காட்சியைத்  திறந்து வைத்தார் .மாணவர்கள் கண்காட்சிக்காக  வரைந்த ஓவியங்கள் ,போட்டியில் வென்றோரின் ஓவியங்கள் சாதனை ஓவியன் செல்வன்  தியாக்ஷ்வா வரைந்த 90 ஓவியங்கள், மாணவர்களின் கலைப் படைப்புகள் ஆகியவற்றோடு தியாக்ஷ்வாவின் பாராட்டுப் பட்டயங்கள் ,விருதுகள் ,பதக்கங்கள் சாதனை ஓவியங்கள் என அனைத்துமே காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தின,

       பண்ணுருட்டி சொக்கநாதன் அவர்கள் புகைப் படக் கண்காட்சியை திறந்து வைத்தார் .ஓவியர் முத்துக்குமரன் அவர்களின் கேமரா க்ளிக்கிய கவிதைகள் என்ற தலைப்பில் அவரது ஒளிப்படக் கருவிக்குள்   உறைந்த காலப் பதிவுகள் வண்ணப்படங்களாக  காட்சிப் படுத்தப்பட்டிருந்தன .அப்படம் குறித்த தகவல்கள் குரள்  வெண்பாவாய்  அவரால் இயற்றப்பட்டு அப்படங்களில் கீழேயே பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது .

         அதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை ரங்கப்பன் அவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் .திருவள்ளுவர் சிலைக்கு கவிதை கணேசன் அவர்களும் பாரதியார் சிலைக்கு ஜெய்சங்கர் அவர்களும்  மாலை அணிவிக்க சக்திவேல் அவர்களும் ஏனைய சான்றோரும் விவேகானந்தர் சிலைக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர் .கலைவாணி முருகன் அவர்கள் கவிதைகணேசனின் தொல் பொருள் கண்காட்சியைத் திறந்துவைத்தார் .பழங்கால நாணயங்கள் , தற்போது உபயோகத்தில் இல்லாத கால ஓட்டத்தில் நாம் மறந்து போன அல்லது  கண்களை விட்டு மறைந்துபோன பொருட்கள் பெரும்பாலானவை காட்சிப்படுத்தப் பட்டதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும் .மேலும் அவர் பெற்ற பாராட்டுப் பாத்திரங்களும் ,விருதுகளும் கூட காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .

        விழாவில் முதல் நிகழ்வாக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன .

            விருதாளர்களை ஸ்வாசிகாவின் நிறுவனர் முத்துக் குமரன் அறிமுகம் செய்துவைத்தார் .

            சென்னை அசோக் நகரைச் சேர்ந்த தியாக்ஷ்வா என்னும் 7 வயது சிறுவனுக்கு 'சித்திரக்கலை வளர் சுடர் ' விருதும் .

            புதுச்சேரி வில்லியனூரை சார்ந்த திருக்காமேஸ்வரன் என்னும் 8 வயது சிறுவனுக்கு  ' சைவத் திருமுறை சேவா ரத்னா ' விருதும்,\

        பண்ணுருட்டியை சார்ந்த கவிதை கணேசன் அவர்களுக்கு ' தொல்பொருள் சேவா செம்மல் ' விருதும்  ,

         பண்ணுருட்டிய சார்ந்த பொம்மைக் கலைஞர் அப்பாளு சம்மந்தம் அவர்களுக்கு  ' வாழ்நாள் சாதனைக் கலைஞர் ' விருதும் வழங்கப்பட்டன .

           முன்னதாக ஸ்வாசிகா தலைவர் மதன் அனைவரையும் வரவேற்றார் .இணை செயலாளர் முருகானந்தம் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார் . இணை செயலாளர் விஜய் முகாம் அறிக்கை வாசித்தார் .

         கலைவாணி முருகன் ,ஜெய்சங்கர் ,ஆசிரியர்கள் மோகன் குமார் ,செந்தில் குமார் ,சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

        செயலர் ராஜேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார் .

        புதுச்சேரி,வேலூர்,காரைக்கால் போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஓவியக் கலைஞர்களும் கும்பகோணம் ஓவியக் கல்லூரி மற்றும் புதுவை பாரதியார் பல்கலைக் கூடம் இவற்றைச் சார்ந்த மாணவ மாணவியரும் சிறப்பாகப் பயிற்சி அளித்தனர் .

        முகாமில் பங்கேற்ற  மாணவர்களுக்கு அளிக்கப்பட பின்னூட்டப் படிவத்தில் பெரும்பாலான மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு ...விஷயம்....இம்முகாமை 10 நாட்கள் மட்டுமே நடத்துவது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் ( இந்த பத்து நாள் முகாமை நடத்துவதற்குள் நாக்குத் தள்ளுகிறதே ...யப்பா ...)அடுத்த முகாம் எப்போது வரும் என்று காத்திருப்பதாகவும் ...பலர் ஐந்து ,நான்கு ,மூன்று வருடங்களாக தொடர்ந்து இம்முகாமில் பங்கேற்றுப் பயிற்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள் ...மிக்க மகிழ்ச்சி ....!

இம்முகாமில் பயிற்சி பெற்று இப்போது  கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவக்  கண்மணிகளும் இளந்தலைமுறை ...வருங்கால ஓவியர்களுக்கு பயிற்சி அளித்தது கூடுதல் சிறப்பு .

        போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு விலை உயர்ந்த வண்ணம் தீட்டும் உபகரணங்களும் , கேடயங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன .முகாமில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்
கலந்துகொண்டு ஓவியக்கலையின் பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொண்டனர் . இவர்களுள் பண்ணுருட்டி பகுதியைச் சார்ந்த மாணவர்கள்  மட்டுமல்லாது கோடை விடுமுறையைக் கழிக்க தம் உறவினர் வீட்டுக்கு வருகை தந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான மாணவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்  தக்கது.

       






No comments:

Post a Comment