Monday 15 April 2019

பொன்னியின் செல்வன் பூங்குழலி

இதோ இந்த நங்கை யார் எனத் தெரிகின்றதா?
பூங்குழலி..
பொன்னியின் செல்வன் பூங்குழலி
என்றால் தமிழ் கூறு நல்லுலகம் நன்கு அறியும்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் இதுவரை கல்கியில் எத்தனை முறை தொடராக வந்தது எனத் தெரியவில்லை..
ஆனால் அந்தத் தொடர்களுக்கு யார் யார் சித்திரம் தீட்டினார்கள் என்று சொல்ல முடியும்.
முதன் முதலில் கல்கி வார இதழில் வெளியானபோது படம் வரைந்தவர்...
கதாபாத்திரங்களை வடிவமைத்தவர் பிரபல ஓவியர் மணியம் அவர்கள். (ம.செ.அவர்களது தந்தை)
அடுத்ததாக வெளியான தொடரில் - இது 1969-ல் அதாவது நான் பிறந்து இருவருடங்கள் கழித்து - படம் வரைந்தவர் ஓவியர் வினு .இவர்தான் ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம்) , வியாசர் விருந்து (மகாபாரதம்) ஆகிய தொடர்களுக்கும் ஓவியம் வரைந்தவர்.
அடுத்து எனக்குத் தெரிந்து ஓவியர் மணியம் அவர்களது பழைய ஓவியங்களைக் கொண்டே மீண்டும் ஒரு முறை தொடர் வெளியானது.
பிறகு ம.செ.அவர்கள் (பொன்னியின் செல்வன் போன்று - மணியம் செல்வன்) வண்ணமயமான ஓவியங்களை வரைந்து அசத்தியிருந்தார் அடுத்த முறை வெளியான தொடரில் .
அதன் பின்னர் வெளியான தொடரில்
ஓவியர் பத்மவாசன் அவர்கள் படங்களை வரைந்திருந்தார்.
வேறு யாரேனும் வரைந்திருந்து நான் குறிப்பிட விடுபட்டிருந்தால் நண்பர்கள் அதை பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.
ஆனால் எத்தனை பேர் வரைந்திருந்தாலும் அத்தனை பேருமே திரு மணியம் அவர்கள்
வரைந்திருந்த கதாபாத்திர உருவங்களை மாற்றாமல் , அப்படியே அடியொற்றி வரைந்து மேலும் மெருகூட்டினார்கள் என்பதுதான் சிறப்பு.
வேறு எந்த தொடராவது இத்தனை முறை மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளதா என்பது சந்தேகம் தான்.
நானே இது வரை நான்கு முறைகள் படித்து முடித்துள்ளேன். இந்த முழு ஆண்டு விடுமுறையில் மீண்டும் ஒருமுறை வாசிக்க எண்ணியுள்ளேன்.
அதே போல் இன்னொன்று குறிப்பிட வேண்டும். பொன்னியின் செல்வன் புதினத்தை புதிதாய் வாசிக்க விரும்புவோர்
அமர் கல்கியின் மற்ற நூல்களான சிவகாமியின் சபதம் வாசித்துவிட்டு ,
அதன் பின்னர் பார்த்திபன் கனவு என்னும் நூலை வாசித்துவிட்டு (இது பார்த்திபன் கனவு என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் வந்தது) நிறைவாக பொன்னியின் செல்வனை வாசிக்க வேண்டும். ஏனெனில்
காலத்தாலும் , கதையமைப்பாலும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை
முதலில் நடந்தது சிவகாமியின் சபதம்.
அடுத்ததாக பார்த்திபன் கனவு.
மூன்றாவதாக நடந்தது பொன்னியின் செல்வன்.
அதாவது சிலப்பதிகாரம் , மணிமேகலை என்ற இரட்டைக் காப்பியங்கள் போல.
அவை எவ்வாறு கதை நடைபெறும் காலத்தால் தொடர்பு கொண்டவையோ
அவ்வாறே இந்த முப்பெரும் புதினங்கள்
கதை நடைபெறும் காலத்தால் தொடர்பு கொண்டவை.
என்னிடம் உள்ள பொன்னியின் செல்வன் தொடர் தொகுப்பில் உள்ள ஓவியர் வினு அவர்களின் ஓவியங்கள் விரைவில் உங்கள் கண்களுக்கு விருந்தாய்...
ம்.. ஒன்று கூற மறந்து விட்டேன். நான் பொன்னியின் செல்வனை முதல் முறை வாசித்தது எப்போது தெரியுமா? நான் 9 ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு எழுதிய பின் வந்த கோடை விடுமுறைக்காலத்தில் - என் பதின் பருவங்களின் துவக்கத்தில் ...
மீண்டும் வாசிப்போமா?

No comments:

Post a Comment