Monday 15 April 2019

மிக நீஈஈஈண்ட பதிவு.. குறிப்பாக ஓவியர்கள் , ஓவிய இரசனையாளர்கள் தவறாது வாசியுங்கள்...
நூல் ஆசிரியர் : #கணபதி_சுப்ரமணியம்
பதிப்பகம் : #யாவரும்
ஓவியம் – தேடல்கள் ,புரிதல்கள் என்கின்ற இந்த நூல் இப்பொழுது என் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது எனது நீண்ட தேடலுக்குப் பின்னும் காத்திருப்புக்குப் பின்னும்.
முதன் முதலில் இந்நூல் வெளிவரப்போவது குறித்து முகநூலில் ஒரு பதிவு இட்டிருந்தார் திரு.கணபதி சுப்ரமணியம் அவர்கள். அவரை நான் முதன் முதலாக சந்தித்தது சென்னை நாகேஸ்வர ராவ் பார்க்கில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியொன்றில் .சக ஓவிய ஆசிரியர்களுடன் சென்னை DPI -ல் புதிய பாட நூல் ஆக்கத்தில் படம் வரையும் பிரிவில் பணிபுரிந்த போது கிடைத்த ஒரு ஞாயிறு நாளில் திரு .காஞ்சிபுரம் தியாகராஜன் அவர்கள் அந்தக் கண்காட்சிக்கு அழைத்திருந்தபடியாலும் , முகநூலில் தொடர்ந்து விளம்பரங்கள் வந்து ஈர்த்ததனாலும் ஊருக்குச் செல்வதை விடுத்து ஓவியக் கண்காட்சிக்குச் சென்ற போதுதான் அவரைச் சந்தித்தேன். அவர்தான் அந்தக் கண்காட்சி அமைப்பாளர் என்பதையும் தெரிந்து கொண்டேன். பின்னர் முகநூலில் நட்பு அழைப்பு விடுத்து நண்பர்களானோம்.
அது முதல் ஓவியம் சார்ந்த அவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வியந்து போனேன். இவை ஒரு தொகுப்பு நூலாக வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்துக் கொள்வேன். ஆம் .நினைத்தது நிஜமானது. இப்படி ஒரு நூல் உருவாக இருப்பது பற்றி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதில் பின்னூட்டத்தில் நானும் புத்தகம் வாங்க விருப்பம் தெரிவித்திருந்தேன். யாவரும் பதிப்பகத்தாரால் வண்ண நூலாக தரமான காகிதத்தில் ஒரு பதிப்பும் , கருப்பு வெள்ளையில் ஒரு பதிப்பும் வெளியாக உள்ளதாக பதிவிட்டிருந்தார்கள்.
நூல் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்தேன். அந்த நேரத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியும் வந்தது. வழக்கமாக கடைசி இரு நாட்கள் இருக்கும் போது செல்லும் நான் இந்த முறை இரண்டாம் நாளே புத்தகத் காட்சிக்குச் சென்றேன். வேண்டிய புத்தகங்களை வாங்கிய பின் யாவரும் பதிப்பக அரங்கத்திற்குச் சென்று ஓவியம் தேடல்கள் புரிதல்கள் புத்தகத்தைப் பற்றி விசாரிக்க அவர்களோ இன்னும் தயாராகவில்லை. அச்சில் இருக்கின்றது. இன்னும் 10 அல்லது 15 நாட்கள் ஆகும் சார் என்றனர். நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
அதன் பிறகு சில வாரங்கள் கழித்து முகநூல் பதிவுகளில் ஓவியம் தேடல்கள் புரிதல்கள் நூல் வெளியானதாக பதிவுகள் பல வெளி யான வண்ணம் இருந்தன. ஓவியப் பிதாமகர்களான புகழேந்தி , இராஜராஜன் உள்ளிட்ட பலர் நூலின் சிறப்புகள் குறித்து பதிவிட்ட படி இருக்க எனது ஆவல் பல மடங்கு வளர்ந்தது. அவற்றை கணபதி சுப்ரமணியன் சாரும் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தபடி இருக்க அவர்கள் பகிர்ந்திருந்த லிங்கை சொடுக்கி B 4 Books ல் on lineல் புத்தகத்திற்கான விலையுடன் Delivery Charge ம் சேர்த்து 1525 ரூ கட்டி நூலுக்காக காத்திருந்தேன்.
இரண்டு வாரம் கழித்தும் நூல் வரவில்லையா தலால் கணபதி சுப்ரமணியம் சாரை தொடர்பு கொண்டு வாரம் கூற அவரும் உடனடியாக பதிப்பகத்தாரை அணுகி அவர்களிடம் கேட்டு உரிய பதில் அளித்தார். அச்சடிக்கப்பட்ட அத்தனை வண்ணப் பதிப்புகளும் உடனே விற்றுத் தீர்ந்தபடியால் மறுபதிப்பு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் , தயாரானதும் முதலில் எனக்குத் தான் அனுப்பி வைப்பார்கள் என்றும் உறுதி கூறினார். சற்று நேரத்தில் பதிப்பகத்தாரும் என்னைத் தொடர்பு கொண்டு அதே தகவலை அளித்தனர். இது மேலும் அந்த நூலின் மீதான எனது ஆவலை இன்னும் அதிகரித்தது. அவர்களிடம் கருப்பு வெள்ளைப் பிரதி இருப்பு உள்ளதா என வினவினேன். இருப்பதாக பதில் வந்தது. உடனே அதற்குப் பணத்தைக் கட்டினேன். இதனை நான் படித்து முடித்ததும் எனது பள்ளி நூலகத்திற்கு என் அன்பளிப்பாக வழங்குவது என்று முடிவு செய்து கொண்டேன். சரியாக மூன்றாம் நாள் அந்தப் புத்தம் என் கரங்களை வந்தடைந்தது. காத்திருந்த புதையல் கரங்களை வந்து அடைந்தது என மிக மகிழ்ந்தேன்.
இனி இந்த நூல் பற்றி:
ஓவியர் கணபதி சுப்ரமணியன் அவர்கள் இயற்றியுள்ள இந்நூல் ஓவியம் பற்றிய நமது பார்வையை முற்றிலும் மாற்றி அமைக்கும் , அல்லது சற்றே செப்பனிட்டு நெறிப்படுத்தும் ஓர் கருவி எனவே கொள்ளலாம்.
கலைகளில் சிறந்தது ஓவியம். அந்த ஓவியக்கலையானது எல்லைகள் இல்லாதது. காலங்கள் கடந்தது. உலகப் பொது மொழிகளுக்கு வரிவடிவம் போன்றது.நிகழ்த்துக் கலைகளுள் ஒன்றான ஓவியக்கலையை நன்கு புரிந்து கொள்ள , புரிந்து கொண்டு தொடர்ந்து அதோடு பயணப்பட உதவும் நூலாக இதனை ஆசிரியர் ஆக்கியுள்ளார்.
ஓவியங்களை வரைவது என்பது சற்றே கடினம்தான் .ஆனால் அவற்றை புரிந்து கொள்வதென்பது அதை விடவும் இன்னும் சற்றே கடினம் அல்லவா? அதோடு சமகாலத்தைய நவீன ஓவியங்களை புரிந்து கொள்வதென்பது ஒரு இரசிகனுக்கு பெரும் சவால் தான்.இந்த நூல் வாசிப்பின் அனுபவம் அதனை ஒரு ஓவிய இரசிகனுக்கு மிக எளிதாக்கி வைக்கின்றது.
திரு.கணபதி சுப்ரமணியம் அவர்கள் எழுதியுள்ள ஓவியம் - தேடல்கள்,புரிதல்கள் -1 என்னும் தலைப்பில் இந்நூல் முதல் பாகமாக வெளியாகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக உள்ளன என்பதும் இதன் மூலம் கண்கூடாகிறது.
ஜீவ கரிகாலன் அவர்களது பதிப்புரை எனது எதிர்பார்ப்பை பல மடங்காக்கியது எனில் , ஓவிய விமர்சகர் இந்திரன் அவர்களது முன்னுரை என்னை இன்னும் பரபரப்புக்குள்ளாக்கியது ...
அந்த பரபரப்புடனே பள்ளியின் தேர்வு நேரம் , தேர்தல் பயிற்சி நேரம் இவற்றின் பரபரப்புடன் போட்டியிட்டவாறு கிடைக்கும் இடைவெளிகளில் வாசித்து முடித்தேன்... இல்லை பயணப் பட்டேன் என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஆம்... இப்புத்தகமே ஒரு பாதைதான். முடிவற்ற பாதை... ஏன் எனில் கலை என்பது காலவெளியின் ஒரு முடிவிலி.. எனவே அதற்கான இப்பாதையும் ஒரு முடிவற்றது தானே...?இந்தப் பாதையில் பயணப்பட்டால் காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கிப் பயணித்து நாம் நன்கறிந்த பெரிய பெரிய ஓவிய மேதைகளையும் , சமயத்தில் நாம் அறிந்தேயிராத பல ஓவிய மேதைகளையும் , அவர்கள்தம் சித்திரங்களையும் கண்ணுற்று , பயணப்பட்டு , அனுபவங்களை உள்வாங்க வைக்கிறார் ஆசிரியர் .
ஓவியம் எனும் மாபெரும் கடலின் - பெருங் கலையின் கூறுகள் அனைத்தையும் அளவற்ற உதாரணங்களுடன் விரிவான கட்டுரைகள் ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகப் பயணத்தில் ராஜா ரவிவர்மா , மைக்கேல் ஆஞ்செலோ ,
ஹைன்ரிக் க்ளே , பால் கிளே , மார்ஷல் டூஷான் , ஹன்ஸ் ஹாப்மென், வில்லியம் டி கூனிங் , அஜந்தா ஓவியங்கள் , பல்லவர் கால ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் , சோழர்கள் கால கலைப்படைப்புகள் , ஜோகன்ஸ் வெர்மியர் , ரவீந்திரநாத் தாகூர், பியட் மொன்றைன், லியனர்டோ டா வின்ஸி, வின்சென்ட் வான்கோ , ராய் செளத்ரி , பாப்லோ பிக்காசோ போன்ற எண்ணற்ற புராதன ஓவியர்கள் முதல் தற்கால ஓவியர்கள் வரை என தாவித் தாவி படைப்புக்களையும்,படைப்பாளிகளையும், ஓவியப் புரிந்துணர்வுகளையும் இணைத்து கருத்துக்களை தொகுத்து கட்டுரைகளாக அளித்துள்ளார். ஒரு தலைப்புக்கு 10 கட்டுரைகள் வீதம் நான்கு உட் தலைப்புகள். புரிதல் , அனுபவம் , பயணம், சிந்தனை என்ற அந்த உட்தலைப்புகள் நம் பயணத்தை மேலும் எளிதாக்குகின்றன .
ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அது சார்ந்த ஒரு மேற்கோள் , ஒரு ஓவியம் எனத் தொடங்கி அக்கட்டுரைக்குள் மேலும் சில முக்கியமான பிரபலமான ஓவியர்கள் வரைந்த சித்திரங்களின் தொடர்ந்த காட்சிப்படுத்தலோடு படிப்பவர்களின் விரல்கள் பிடித்து அந்தப் பாதையோடு அழைத்துச் செல்கிறார் கணபதி சுப்ரமணியம் அவர்கள்.
கவிதை , இசை , பாடல் , நடனம் , ஓவியம் என அனைத்து கலை வடிவங்களையும் ஒரு நேர்க்கோட்டில் இணைத்து , இசைக்கும் ஓவியத்திற்கும் உள்ள கருத்துருவ ஒற்றுமைகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
இந்நூலில் உள்ள நாற்பது கட்டுரைகளுமே மிக ஆழமானவை. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுபவை. என் மனதில் அவ்வப்போது எழும் எண்ணங்களை பிரதிபலித்திடும் இந்த வரிகள் மிகப் பிடித்தமானவை. இவற்றை வரிகளாக்கியுள்ள கணபதி சுப்ரமணியம் அவர்களின் எண்ண ஓட்டத்தைக் கண்டு மிக வியக்கின்றேன்.
ஒரு ரசிகனின் மகிழ்ச்சிக்காகவே ஒரு கலைஞன் இயங்குவது போல் பொதுவாக நாம் எண்ணினாலும் , அவன் உண்மையில் தனது செயல் அனுபவத்திற்காக ஏக்கம் கொண்டே செயல்படுகின்றான்.
ஆஹா... என்ன ஒரு அனுபவ சிந்தனா வரிகள்...
ஓவியக்கலையின் பரிமாணத்தை இவ்வளவு துல்லியமாய் , நேர்த்தியாய் , அக்குவேறாய் ஆணிவேராய் அலசி என்பார்களே...அது போன்று அனைத்து கூறுகளையும் ஆராய்ந்து ,அனுபவத்தின் பாதையில் பயணித்த விழுமியங்கள் அனைத்தையும் வார்த்தைகளாக்கி இந்த நூலை படைத்துள்ளார் ஆசிரியர் .இக்கலையைப் பற்றிய விசாலமான பார்வையை இந் நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஓவியனும் , ஒவ்வொரு இரசிகனும் _ ஏன் ஓவியம் பற்றிய புரிதலே அற்ற ஒவ்வொரு பாமரனும் கூட புரிந்து கொள்ளும் வல்லமை கொண்டது இந்நூலின் எழுத்து நடையும் , நேர்த்தியான வடிவமைப்பும்.
ஒருவன் எப்படிப் பட்ட ஓவியனாக இருப்பினும் இந்நூலை வாசித்து முடித்தபின் அல்லது வாசித்துக் கடந்த பின் சித்திரக் கலையின் மீதான அவனது பார்வை முற்றிலும் மாறி அவனை வேறொரு தளத்திற்கு அழைத்துச் சென்று விடும். நான் மட்டுமென்ன விதிவிலக்கா?
இந்நூலில் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் நிஜ வாழ்வின் நிதர்சனங்கள் நம்மைப் பார்த்து கண்சிமிட்டுகின்றன.
உதாரணத்திற்கு:
1. சிந்திக்க :
ஓவியம் தீட்டத் தெரியாத பொழுது ஓவியம் தீட்டுவது எளிமையானது. அதுவே ஓவியம் தீட்டத் தெரியும் எனும் பொழுது மிக கடினமாகிவிடுகின்றது.
2. சிரிக்க:
ஒரு பத்திரிகையின் நிருபரை கவிஞர் என்று கூறுவதில்லை. ஆனால் அதிகக் கட்டணம் வசூலிப்பவரானால் சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிப்பவரையும் , பட்டி பார்ப்பவரையும்கூட
கலைஞர் என்கிறோம்.
இந்நூல் ஓவியர்களுக்கு மட்டுமல்ல.. ஓவிய இரசனையாளர்களுக்கு மட்டுமல்ல. வளரும் ஓவியர்களான , நாளைய ஓவியர்களான ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கும் கூட குறிப்பாக காட்சித் தொடர்பியல் மாணவர்களுக்கு கருத்தியல் (Theory) சார்ந்த துணை நூலாகக் கூட பரிந்துரை செய்யலாம் என்பது எனது யோசனை.
கருப்பு வெள்ளை நூலே எனக்கு இந்த அனுபவத்தைக் கொடுத்தது என்றால் அந்த வண்ணப் பிரதி...
I am waiting...
இந்த நூலை நீங்களும் பெற வேண்டுமா?
எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை சொடுக்கவும்.

No comments:

Post a Comment