Saturday, 23 September 2017

              தூய்மையே சேவை  திட்டத்தின் 5 ஆம் நாளான
( நிறைவு நாளான )இன்று காலை 10 மணியளவில் சாரணர்கள் தலைமை ஆசிரியர்  பிற ஆசிரியர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்க ,மாணவர்கள் நடை  பயணமாக திருவதிகை வீரட்டானத்து இறைவன் ஆலயம்  கிளம்பினர்.
          சுமார் 4 கி .மீ தொலைவுள்ள இடத்தை நடந்தே கடந்து ஆலயம் சென்ற சாரணர்கள் இறைவனை முதலில் தரிசித்து ,பின்னர் தூய்மைப் பணிகளைத் தொடங்கினர் .மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்ட சாரணர்கள் ஒட்டடை நீக்குதல்,குளக்கரை தூய்மை,நூறு கால் மண்டபத் தூய்மை.புற்களை நீக்குதல் உள்ளிட்ட சேவைகளை புரிந்தார்கள் .
            மதிய உணவு கோவிலில் வழங்கப் பட்டது.உணவுக்குப் பின் மீண்டும் சேவைகள் துவங்கின .நட்சத்திர மரங்கள்,திசைத் தாவரங்கள் ,நவகிரகத் தாவரங்கள் இவற்றுக்கிடையே வளர்ந்திருக்கும் தேவையற்ற புற்கள் .களைச்செடிகளாகியவற்றை மண் வெட்டி கொண்டு அகற்றினர்.புற்கள் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு உணவாக்கப் பட்டன.
            உணவு இடைவேளையின்போது கோவிலின் தல வரலாறு ,திருநாவுக்கரசரின் வாழ்க்கைக்கு கதை ஆகியன கூறப்பட்டது.கோவில் தூண்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பு குறித்தும் கூறப் பட்டது.
            நிகழ்வுகள் நிறைவடைந்ததும் மாணவர்கள் அனைவருக்கும் பிரசாதம்,சுவாமி படம் வழங்கப் பட்டது.இந்நிகழ்வு சாரணர்களைப் பொறுத்தவரை சேவை முகாமாக மட்டுமன்றி வரலாற்று சுற்றுலாக் களப்  பயணமாகவும் இருந்திருக்கும்.
           மேலும் தங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குண்டான மரங்கள் பற்றியும் படித்து அறிந்து வியந்தபடி என்னிடம் பகிர்ந்துகொண்டனர் .ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்....!
            இதுதான் சாரணியம் ...இதுதான்  களப்பயணம் ...இதுதான் உண்மையான கல்வி ....!சாரணியம் தரும் கற்றல் அனுபவத்தை -வாய்ப்பை -வாழ்க்கைக்கு கல்வியை வகுப்பறை தந்துவிடுமா என்ன ? மாணவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை ...எனக்கும்தான் என்பதைக் கூறவேண்டுமா என்ன?

Thursday, 21 September 2017

              144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா காவேரி புஷ்கர நிகழ்வானது இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
           
             மயிலாடுதுறையில் துலாக் கட்டத்தில்  நடைபெற்றுவரும் காவேரி புஷ்கரம்  பெரு நிகழ்வில் கலந்துகொண்டு புனித நீராடும் வாய்ப்பு அதுவும் மஹாளய அமாவாசை தினத்தில் நீராடும் வாய்ப்பு கிடைத்தது .தவறவிடாமல் சிறப்பு வரையறுக்கப் பட்ட விடுப்பு எடுத்துக் கொண்டு குடும்ப நண்பருடன் அதிகாலை கிளம்பி வழியெங்கும் உள்ள தொன்மை வாய்ந்த கலைப் பொக்கிஷங்கள் நிறைந்த ஆலயங்களை தரிசித்து பகல் 2 மணியளவில் மயிலாடுதுறையைஅடைந்தோம்.
         
               காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன.கூட்டம் அலைமோதிய நிலையிலும் குழப்பம் ஏதுமின்றி நன்முறையில் அனைத்து தீர்த்தக் கிணறுகளிலும் நீராடி காவேரி அன்னையை வணங்கியது மனதுக்கு நிறைவாக இருந்தது .
           
           வழி நெடுக நாங்கள் தரிசித்து மகிழ்ந்த ஆலயங்கள் பற்றிய பதிவு விரைவில்....!

தூய்மையே சேவை

            தூய்மையே சேவை இயக்கத்தின் மூன்றாம் நாள் சேவையாக பண்ணுருட்டி காந்தி வீதியில் உள்ள தர்கா ( பள்ளி வாசல்) வில் சாரணர்களால் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
         
           வழக்கம் போல் இன்றைய  முடிந்ததும் 4 மணியளவில் ஒன்று கூடிய சாரணர்கள் தூய்மைப் பணிக்கு வேண்டிய துப்புரவு உபகரணங்களுடன் தலைமையாசிரியர் முன்னின்று வழியனுப்ப ,பள்ளிவாசல் நோக்கி புறப்பட்டார்கள்.தர்காவின் நுழைவாயிலில் இருந்தே தூய்மைப் பணி  மேற்கொள்ளப் பட்டது.உள்ளே சென்றதும் அங்கிருந்த காகிதக் குப்பைகள்,பாலிதீன் பைகள் போன்றவற்றை அகற்றினர் .சிலர் அங்கிருந்த புதர்கள் ,தேவையற்ற களைச் செடிகள் போன்றவற்றை மண்வெட்டிகள் கொண்டு அகற்றினர்.சில சாரணர்கள் சேகரித்த குப்பைகள்,அப்புறப் படுத்தப்பட்ட தாவர மிச்சங்கள் போன்றவற்றை கூடைகளில் வாரிக்கொண்டு போய் குப்பைகள் கொட்டுமிடத்தில் கொட்டினார்கள்.சில சாரணர்கள் விதான ஒட்டடைகளை நீக்கினார்கள்.மற்றும் சில சாரணர்கள் அங்கிருந்த சிறியதும் பெரியதுமான கற்களை அப்புறப் படுத்தினார்கள்.
             
            அவர்கள் தூய்மைப் பணி ஆற்றிய தருணங்களின் காட்சிப் பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு .

Monday, 18 September 2017

இன்று பிற்பகல் ஒரு  தொலை பேசி தகவல் .சாரண செயலர் அவர்களிடம் இருந்து ...இன்று முதல் வரும் அக்டோபர் -2 வரை ஸ்வச் பாரத் இந்தியா திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சில பள்ளிகளை தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளின் சாரண இயக்க மாணவர்களைக் கொண்டு அப்பகுதியில் உள்ள முக்கியமான இடங்களை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் இருந்து சுற்றறிக்கை அனுப்பப் பட்டு உள்ளதாகவும் ,பணிகளை இன்று முதலே  கேட்டுக் கொண்டார்.தேர்வுநேரமாக இருப்பினும்கூட ,தேர்வுகள் முடிந்ததும் தினமும் அரை மணி நேரமாவது தூய்மைப் பணியில் சாரணர்களை ஈடுபடுத்தி திட்டத்தின் நோக்கம் ஈடேறுவற்கு ஒத்துழைக்கக் கேட்டுக்கொண்டார்.அதன்படி இன்று  மாலை தேர்வு முடிந்ததும் சாரண மாணவர்களை ஒருங்கிணைத்து தலைமை ஆசிரியரின் தலைமையில் நிகழ்வு துவக்கி வைக்கப் பட்டது.இன்று தற்செயலாக பண்ணுருட்டி நகர மன்ற துப்புரவுப் பணியாளர்களும் பள்ளியின் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.அவர்களுடன் நமது சாரணர்களும் இணைந்து பள்ளியை சுத்தம் செய்தனர்.இன்றிலிருந்து தினமும் தூய்மைப் பணி  மேற்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்  பட்டது .கடை வீதி ,திருவதிகை சிவன் கோவில்,பூங்கா உள்ளிட்ட இடங்கள் தூய்மை செய்வதற்கான பகுதிகளாக அறிவிக்கப் பட்டன. ஆனால் பள்ளி வளாகத் தூய்மை அல்லது சுற்றுப் புறத் தூய்மை என்பது ஏதோ சாரண அல்லது நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை கொண்டு செய்யவேண்டிய பணி அல்ல .அவ்வாறு தூய்மை செய்த பிறகு அதை தொடர்ந்து பராமரித்து வருவதுடன் அந்த இடங்களில் கண்ட குப்பைகளை வீசி மீண்டும் அந்த இடத்தை அசுத்தமாக்கிப் பார்க்கும் மனிதர்கள் உள்ளவரை தூய்மை பாரத் திட்டம் தோல்வியில்தான் முடியும்.இதுபோல் பள்ளி வளாகத்தை தூய்மை செய்துவிட்டு வந்தால் வகுப்பறை சாளரங்கள் வழியே காகிதங்களை கசக்கி எரிந்தும் ,மதிய உணவுவேளையின்போது உணவு உண்ட மிச்சங்களை,பாலிதீன் பார்சல் காகிதங்களை எரியும் மாணவர்களின் கலாச்சாரத்தை என்னவென்பது?இறைவணக்கக் கூட்டங்களிலும் இதுகுறித்துக் கூறினாலோ அல்லது தனித்தனி மாணவர்களிடம் நயந்து கூறினாலோ கூட செவிடன் காதில் ஊதிய சங்காய் பயனற்றுப் போவதுதான் நிதர்சனம்.இது ஏதோ எங்கள் பள்ளியில் மட்டுமல்ல ...அநேகமாக இந்தியாவின் எல்லா பள்ளிகளிலும் இதுதான் நிலைமை.எல்லா பொது ஜனங்களிடமும் இதே மனப்பான்மையைப் பார்க்கலாம்.அவர்கள் கடன் குப்பை போட்டுக் கிடப்பதே...!அவர்களின் குப்பை இருப்பினும் தன்னார்வத் தொண்டர்கள் சோர்ந்துபோவதில்லை .அவர்கள் கடன் தூய்மை செய்து கிடப்பதே.....!ஊதுற சங்கை ஊதி வைப்போம் ...விடியும்போது விடியட்டும் ...!எல்லாமே ஒரு சடங்காய் அல்லவா போய் கொண்டு இருக்கிறது?

Thursday, 14 September 2017

       அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்  கீழ் நடத்தப் படும் தேசிய அளவிலான கலைவிழா கலா உத்சவ் என்ற பெயரில் கடந்த மூன்று வருடங்களாக பிரம்மாண்டமாக கொண்டாடப் பட்டு ,வெற்றிபெறும் மாணவர்களின் குழுவிற்கு பெருந்தொகையும்  பரிசாக வழங்கப் பட்டுவருகின்றது.பள்ளி அளவில் ,மண்டல அளவில்,கல்விமாவட்ட அளவில் ,மாவட்ட அளவில் ,மாநில அளவில் என பல நிலைகளில் போட்டிகள் நடத்தப பட்டு சிறந்த மாணவர்களை தேசிய அளவில் கலந்துகொள்ளச் செய்கின்றார்கள்.நடனம், இசை,நாடகம், காண் கலை என நான்கு போட்டிகள் .அனைத்துமே குழுப் போட்டிகள்தாம்.இவ்வருடம் மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவராக என்னை நியமித்து உள்ளார்கள்.போட்டிகள் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்ற சூழலில் அதிகாரிகள் ஆர்வம் காட்டினாலும்.பள்ளி அளவிலோ ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அளவிலோ மட்டும் அல்லாது  பெற்றோர்களும் கூட ஆர்வம்காட்டாதது பெரும் குறை.இருப்பினும் ஆர்வம் கொண்ட சில பள்ளிகள் ,ஆர்வம் கொண்ட சில மாணவர்களின் பங்களிப்பால் கடலூர் கல்வி மாவட்ட அளவில் மற்றும் விருத்தாசலம் கல்விமாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன .கடலூர் கல்வி மாவட்ட அளவில் 13-09-2017 அன்று கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் ,விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் 14-09-2017 அன்று விருதை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன. ,15-09-2017 இ ன்று- மீண்டும் கடலூர் மாவட்ட அளவிலான போட்டிகள் --மாநில  அளவில் பங்கேற்கும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டிகள்-- முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  நடைபெற்றன .மாவட்ட  அளவில் நடைபெற்ற போட்டிகளின் சில காட்சிகள் ...இதோ உங்கள் பார்வைக்கு...!.

வெற்றி பெற்ற அணிகள் :

நடனம்: சி.கே.மெட்ரிக் பள்ளி,கடலூர் .

இசை    :சி.கே.மெட்ரிக் பள்ளி ,கடலூர் .

நாடகம்: அரசு உயர்நிலைப் பள்ளி ,கருக்கை .

காண் கலை :  திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி,பண்ருட்டி .
                               அரசு மேல்நிலைப் பள்ளி,பண்ருட்டி ,
                               சி.கே.மெட்ரிக் பள்ளி ,கடலூர் இவைகளின் ஒருங்கிணைந்த                                    குழு.

Friday, 8 September 2017

கலைஞரே...!
ஒரு கலைஞனின் திறமையை 
மற்றொரு கலைஞனே
 நன்கு சிலாகித்துச் சொல்லமுடியும்....!
 வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 
என்று பொய் உரைக்க மாட்டேன் .
தாய் தமிழிலே மற்றும் 
தரணியில் வழங்கும் மொழிகளிலே 
எண்ணற்ற வார்த்தைகள் கொட்டிக்கிடக்கின்றன.
இருந்தாலும் 
உம்மைப் பாராட்ட ஓர் வார்த்தை போதும்.

அற்புதம் .

திறமைக்குத் தலை வணங்குகிறேன்.!