Monday 15 September 2014

ஓசோன் எனும் தெய்வம் காப்போம்

      ஓசோன் படலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த 
சுற்றுச் சூழல் அறிஞர்களின் கருத்தாக முன்வைக்கப் பட்டிருக்கின்ற 
இன்றைய சூழலிலே நாளை உலக ஓசோன் தினம் அனுசரிக்கப் பட உள்ளது.இதுவும் பத்தோடு ஒன்று பதினொன்றாக மற்ற கொண்டாட்டங்களைப் போல புகைப் படத்திற்கு போஸ் கொடுக்கக்கூடிய நிகழ்வாகவோ அல்லது கொடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட நிதியை சம்மந்தப்பட்ட துறைகள் மாணவர்களுக்கு கல்லூரி அளவிலும் பள்ளி அளவிலும்பேரணிகள் நடத்தி , போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கிவிட்டுபோகும் நிதியை தணிக்கையாளர்களுக்கு கணக்கு காட்டிவிட்டுப் போகும் அரசு அதிகாரிகளை கைகாட்டிவிட்டுப் போகும் கண்துடைப்பு நிகழ்வாகவோ இருக்கக் கூடாது.மாறாக ஒவ்வொரு மாணவனின் மனத்திலும் ,பொதுமக்களின் மனத்திலும் உண்மையிலேயே விழிப்புணர்வு ஏற்பட்டு ,இந்த உலகிற்கு தனது பங்களிப்பை அளிக்க தானே  முன் வரக்கூடிய ஒரு தொடர் நிகழ்வாக அமைய வேண்டும்.


     

         அதன் முதல் கட்டமாக உலக ஓசோன் தினமாகிய நாளை ஒருநாளாவது ஒசோனுக்கு எமனாக இருக்கும் C F C என்கின்ற வேதிப்பொருளை -வாயுவை வெளியிடும் குளிர்சாதனப் பெட்டிகள் ,குளிரூட்டிகள் (A /C )ஆகியவற்றின் இயக்கங்களை நாளை ஒருநாளாவது நிறுத்திவைக்கலாம் (பால் பதப் படுத்தும் நிலையங்கள் மற்றும் முக்கியமான மருந்துப் பொருள்களை பாதுகாக்கும் மருந்துக் கடைகள் மட்டும் விதிவிலக்குகள் ).அதீதப் புகை கக்கும் இருசக்கர ,நான்கு சக்கர மோட்டார் வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்தினை மேற்கொள்ளலாம்.ஓரம் கட்டப்பட்ட மிதிவண்டிகளை துடைத்து அதில் பயணம் செய்யலாம் . 
       
       இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்ற புலம்பல்கள் ஒரு பக்கம் எழும்பலாம்.இதெல்லாம் வேலைக்காகாது    என்ற முனுமுனுப்புகள் கேட்கலாம்.நான் ஒருவன் இதையெல்லாம் செய்துவிட்டால் ஓசோன் ஓட்டை உடனே அடைத்துக்கொள்ளுமா  ? என்ற எகத்தாளக் கேள்விகள் எழலாம்.
     
      ( காந்தி அண்ணல் பிறந்த நாளுக்கு டாஸ்மார்க கடைகளுக்கு விடுமுறை விடுவதால்  குடிகாரர்கள் குடிப்பதை நிறுத்திவிடப் போகிறார்களா? அல்லது மதுப் பழக்கம் அடியோடு அழிந்து போய்விடுமா என்ன ...!இருந்தாலும் அன்றைய தினம் மட்டுமாவது ஒருசில குடிகாரர்களாவது    குடிக்க மாட்டார்கள் அல்லவா ...பலர் முதல் நாளே வாங்கி வீட்டில் பதுக்கிக் கொண்டு அடுத்த நாள் போதை ஏற்றிக்கொள்வது வேறு விஷயம்.)  
        
      ஓசோன் ஓட்டையை அடைப்பது என்பது இந்துமாக் கடலில் சேது பந்தனம் கட்டுவதுபோன்ற செயல். அதில் நமது செயல்பாடுகள் அணில் மணல் சுமந்து சென்றதுபோலத்தான்.
        
       ஊதுகிற சங்கை ஊத்தி வைப்போம் ...
       விடிகிற போது விடியட்டுமே...
       ஆனால் நிச்சயம் விடியும் என்பது மட்டும் நிச்சயம்.     

No comments:

Post a Comment