Saturday, 25 October 2014

கனவு

புதிதாய் பூத்த பொன் காலைப் பொழுது ....

கண்விழித்துப் பார்த்தேன் ...

என் ஜன்னலுக்கு வெளியே மழை ....

விடியல் ... கனவிலா ...?

கனவு பலிக்குமா ...?


Sunday, 12 October 2014

கனவுகள்

எத்தனையோபேர் கனவுகளும் 

உழைப்பும் சேமிப்பும் 

அடகுத் தாலியும் 

வங்கிக்கடனும் 

துருப்பிடித்துப்போய் 

கேட்பார் அற்றுக் கிடக்கின்றன

காவல்துறை வளாகத்தில் 

இருசக்கர வாகனங்கள் ...! 


விந்தைதான்

விந்தைதான் 

வேண்டாம்  என்று 

வெறுப்புடன் வீசி எறிகிறபோது 

குப்பையாவதெல்லாம்

வறியவர்கள்

விரும்பிச் சேகரிக்கும்போது 

செல்வமாகின்றனவே ...!

விந்தைதான் ! 

 

 

 

Tuesday, 7 October 2014

அரிவாள் மூக்கு

கடலூர் சிதம்பரம் சாலையில் ...

திருச்சோபுரத்திற்கு அருகே உள்ளது 

அரிவாள் மூக்கு என்ற சிற்றுலாத் தலம் 

(சுற்றுலா அல்ல  -சிற்றுலா -பிக் நிக் ஸ்பாட் ) 

ஒரு குட்டி ஜெய் சல்மீர் பாலைவனத்தை 

நம் கண்முன் காணலாம் ஜெய்ப்பூர் போகாமலேயே ...

ஒருபுறம் பறந்து விரிந்த 

காற்று விளையாடிக்களித்த மணலலை படிந்த 

நிலப்பரப்பு ஒரு சிறு குன்றுபோல்...

மறுபுறம் அழகான வளைந்து 

அரிவாளை நினைவூட்டும் நதி நீரோட்டம் ...

கண்கொள்ளாக் காட்சிதான்  ...

குடும்பத்துடன் சென்று கண்டு விளையாடிக் களிக்க 

அதிகம் செலவு வைக்காத 

மன நிறைவை ...இயற்கையான குளிர்ந்த தென்றலை 

தவழவிடும் தளம்.

மாலை மூன்று மணிக்குமேல் ஆறு மணிவரை

ரம்மியமாக காட்சி அளிக்கும் இடம் 

அதற்குப் பின் அதாவது இருட்டியபின் சற்றே அச்சத்தை தோற்றுவிக்கும் ..

திருச்சோ புர நாதர் கோவிலும் வணங்கி மகிழத்தக்க திருத்தலம் .

அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது சிவலிங்க மூர்த்தி 

நால்வரால் பாடப்பட்டது .

ஒருமுறை சென்று வரலாமே! 


Add caption











விசாரிப்பு

நிலையறியாது படுக்கையில் நான் ...

சாளரம் வழியே 

தன்  கிரணக் கரம் நுழைத்து 

நலம் விசாரிக்கிறது நிலா !




நேர்மறை

எத்தனைதான் 

எட்டி எட்டி மிதித்தாலும் 

முன்னோக்கி மட்டுமே 

நகரக் கற்றிருக்கிறது 

மிதிவண்டி ....!




பாலபிஷேகம்

ஆலய வாசலில் 

ஏழைக் குழந்தை 

அழுகிறது பாலுக்காய் 

உள்ளே இறைவனுக்குப் 

பாலபிஷேகம் 





Monday, 6 October 2014

ஓவியர் K .மாதவன்






ஓவியர் K .மாதவன் 

தமிழக ஓவிய பிதாமகர்களுள் ஒருவர் .

ஓவியர் மாருதி போன்றவர்களின் குரு.

என் போன்றோர்களுக்கு மான சீக குரு .

இவரது வண்ணச் சேர்க்கை மனதுக்கு மிக இதமானது .

கொண்டையா ராஜூ ,சர்தார் ,மணியம் போன்றோர்களின் சமகாலத்தவர் 

ஒரு காலத்தில் இவரது வண்ண ஓவியங்கள் இடம் பெறாத 

வார இதழ்கள் ,காலண்டர்கள் ,வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றைக் 

காண்பது அரிது .இவரது ஓவியங்களைக் காண ..ரசிக்க ...வியக்க ... பகிர ...

http://artistkmadhavanpaintings.blogspot.in/

என்ற வலைப்பூ தளத்திற்குச் சென்று பார்க்கலாமே !

















Thursday, 2 October 2014

அருவி


அகத்தியர் அருவிக்குள் நுழைந்து 

நாங்கள் குளித்துத் திளைக்கும் முன் 

எங்களைக் கண்ட உற்சாகத்தில் 

அமர்க்களமாய் அடம் பிடித்த 

அருவி எனது காமிராவில் நுழைந்து 

அடாவடியாய் அற்புதமாய் 

முத்துப் பரல்களை  

மழையைப் பொழிந்த போது ...

எங்கள் மனதில் தோன்றிய 

மன மகிழ்ச்சி எனும் அருவியின் முன் 

தான் தோற்றுப் போனதால் 

ஹோ என்ற ஆர்பரிப்பு ஒலி எழுப்பி 

மலையிலிருந்து கீழ்நோக்கி 

தற்கொலை செய்துகொள்கிறதோ ...!





மன வண்ணங்கள்

வாழ்க்கையை வண்ணமயமாக வாழ 

வாய்ப்புக்கள் பல


உன்னைச் சுற்றி வாரியிறைந்துகிடந்தாலும் ...

இருட்டில்தான் உழல்வேன் ...

என்று பிடிவாதாமாய்


வீண் கற்பனைகளில் மூழ்கி ...

வீணே வாழ்க்கையை தொலைக்கும் வீணர்கள் 


தான் மட்டும் இருட்டில் தொலைந்து போவதில்லை....!

தன்னுடன் பயணிப்பவர்களையும் 

கும்மிருட்டில் கரைத்துவிடுகிறார்கள் !


வாருங்கள்... 

வாழ்க்கையை வண்ணமயமாய் வாழ்வோம் !


நகுக

காந்தி சிரிக்கிறார் 

வள்ளுவனைப் புரிந்ததால் 

கறைபட்ட கரங்களில் 

தவழும் கரையுள்ள கரன்சிகளில்... 

இடுக்கண் வருங்கால் நகுக 


கிழிசல்

அட்டென்ஷன் ....

ஸ்டேன்டட்டீஸ் .....சொல்லவில்லை 

ஆனாலும் கைகள் அடிக்கடி பின்புறம் செல்கின்றன...

ட்ரவுசரில்  கிழிசல் ! 
  







கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே



கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே 

இளம் கன்னித் தமிழாய்த் திகழ்பவளே!

நல்ல கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே!



வீணையைக் கையினில் நீ எடுத்தாய் 

தூய வெள்ளைக் கலையினையே உடுத்தாய் 

வாணீ அமுதத் தேன்  வடித்தாய் 

சுவை வளரும் காவியம் பல கொடுத்தாய் 

சுவை வளரும் காவியம் பல கொடுத்தாய் 

நல்ல கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே 



தூரிகைக் கையினில் நாம் எடுத்தே 

பல வண்ணங்களை ஒன்றைக் குழைத்தே 

கவின்மிகு சித்திரம் தீட்டிடுவோம் 

அன்னை நாமகள் தேவியை வணங்கிடுவோம் 

அன்னை நாமகள் தேவியை வணங்கிடுவோம்

நல்ல கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே 



Wednesday, 1 October 2014

கீதை




கீதை நூல் தினம் தினம் 

செத்துப் பிழைக்கிறது

நீதி மன்றங்களில் 

தன் தலை மீது கை வைத்து 

பொய் சத்தியம் செய்வதால் ...

சொல்லுவதெல்லாம் உண்மை ...!