Thursday 1 March 2018

புத்தகம்

                                                                       புத்தகம்




பாரில் வாழும் யாவரும்
விரும்பு கின்ற புத்தகம்
படிக்க படிக்க இன்பந்தன்னை
வாரி வழங்கும் புத்தகம்

ஐந்து வயது ஆனபோது
தோழன் ஆன புத்தகம்
இன்னும் எனது நட்பைத் தொடரும்
ஒரே நண்பன் புத்தகம்

வாழ்வில் சிறந்து விளங்கிட
கருத்து சொல்லும் புத்தகம்
பக்கம் தோறும் படங்கள் கொண்டு
காணக் கிடைக்கும் புத்தகம்

அறிஞனாக நம்மை உயர்த்தும்
ஞானக் கருவி புத்தகம்
அறிஞர் அண்ணா இறக்கும் போதும்
நாடிப்  படித்த புத்தகம்

இல்லம் தோறும் இடம் பிடிக்க
வேண்டும் நல்ல புத்தகம்
ஊர்ப் பயணம் போகும் போதும்
பையில் இருக்கவேண்டும் புத்தகம்

கல்வி தன்னை வழங்கிடும்
கடவுள் அந்தப் புத்தகம்
கரங்கள் தவழ்ந்து பக்கம் புரண்டு
இன்பம் தரும் புத்தகம்

நல்ல  வழியில் செலுத்தியே
மனதைச் செதுக்கும் புத்தகம்
நண்பர் பிறந்த நாளில் வழங்க
சிறந்த பரிசு புத்தகம்

அச்செ ழுத்தின் வாசத்தை
அளிக்கும் நல்ல புத்தகம்
காலம் கடந்தும் மேதைகள் உடன்
பேச உதவும் புத்தகம்

நூலகத்தில் வாசம் செய்யும்
ஜீவன் உள்ள புத்தகம்
மனித உயிர்கள் உயர்வு கொள்ள
கடவுள் தந்த வரம் புத்தகம்

இரவல் வாங்கிப் படித்திட
இன்பம் தரும் புத்தகம்
இனிக்க இனிக்க செய்தி நிறைய
அள்ளித் தரும் புத்தகம் 













 
 

No comments:

Post a Comment