Thursday 1 March 2018

ராஜசேகரன் பரமேஸ்வரன் - பாகம் - 1


ராஜசேகரன் பரமேஸ்வரன் பாகம் - 1


அவனருளால் அவன் தாள் வணங்கி ...

சைவத்தில் ஊறித்  திளைத்தவர்க்கு இதன் பொருள் நன்றாய் விளங்கும் .
01-02-2018 அதாவது பிப்ரவரி முதல் நாள் - வியாழன் அன்று  அதன் எடுத்துக்காட்டாய் ஒரு நிகழ்வு ...
தியாகராஜன் என்னை அழைத்து சென்று பரமேஸ்வரனிடம் ஆற்றுப் படுத்திய நிகழ்வு ...!
அல்ல ... அல்ல ....  அறிமுகப் படுத்திய நிகழ்வு ...!
கலைச் சங்கமம்...
 கலைஞர்களின் சங்கமம் ...
தியாக ராஜன் ...திருவாரூர் தியாக ராஜன் அல்ல ...
காஞ்சிபுரம் தியாக ராஜன் ...!
முக நூல் நண்பர் .
பரமேஸ்வரன் ...கயிலாய பரமேஸ்வரன் அல்ல ...
ராஜசேகரன் பரமேஸ்வரன் ....
ஆகச் சிறந்த ஓவியர் .
தமிழ்நாட்டின் மார்த்தாண்டத்தில்  பிறந்து
(கன்னியாகுமரி மாவட்டம் -களியக்காவிளை )
மலையாள மண்ணில் வாழ்பவர் ....
இருமுறை கிண்ணஸ்  சாதனைகளை நிகழ்த்தியவர் .
லிம்கா சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்தவர் .
பெரிதினும் பெரிது கேள் என்றான் பாரதி ...
இவர் அதனை தன்  ஓவியங்களில் செய்து காட்டிக்கொண்டு இருக்கிறார்.
மிக மிகப் பெரிய பெரிய அளவுகளில்
பிரம்மாண்டமான ஓவியங்களை அனாயாசமாகத் தீட்டி
பார்ப்பவர்களை மலைக்கச் செய்பவர் ..
விருது பெற்ற  கலை இயக்குனர் .
நம் சம காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர் .
முக நூல் நண்பரும் கூட .

அப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞர்
சென்னை இலயோலா கல்லூரியில்
தங்கியிருப்பதாக தகவல் கூறினார் தியாக ராஜன் அண்ணா தொலைபேசியில்...
நாங்கள் அப்போது சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில்
புதிய  பாட நூல்  ஆக்க முகாமில் பணி  நிமித்தம் தங்கியிருந்தோம்.
வாய்ப்பை விடுவேனா என்ன ...?
 "அண்ணா ...இன்று மாலை 6 மணிக்கு மேல் நாங்கள் அவரை சென்று பார்க்க வாய்ப்பிருக்கிறதா?" என்று வினவினேன் ..அப்போது பகல் 12.30 .
 சற்றும் யோசிக்காமல் .."சரி .. நான் முதலில் அவரிடம் அனுமதி பெற்றுவிடுகிறேன் . கிடைத்தால் நானே அழைக்கிறேன்," என்றார்.
சரியாக 2 மணிக்கு அழைப்பு வந்தது . சரியாக ஆறு மணிக்கு லயோலா கல்லூரிக்கு வந்துவிடுங்கள் . என்றார் தியாக ராஜன் அண்ணா .
அவருக்கு நன்றி கூறிவிட்டு என்னுடன் எனது ஓவிய நண்பர்கள் இன்னும் மூவரையும் அழைத்து வருவதாகக் கூறினேன்.
சரி வாருங்கள் என்றார் .
முன்னதாக அந்த கல்லூரியில் விடுதியில் தங்கி இளங்கலை கணிதம் முதலாமாண்டு பயின்றுகொண்டிருக்கும் எனது மாணவன் சந்தோஷுக்கு தொலைபேசியில் தகவல் கூறினேன் .ஒரே கல்லில் இரண்டு மாங்காய் முடித்துவிடலாம் அல்லவா ?
ஓவியரையும் சந்திக்க முடியும் ..
எனது அன்பு மாணவனையும் பார்த்துவிடலாம் .
 நுங்கம் பாக்கத்தில் ஆட்டோ பிடித்து சக ஆசிரியர்கள் புதுக்கோட்டை தனபால்   மற்றும்  தேனி  மனோகரன் சகிதம் சரியாக 6 மணிக்கு கல்லூரி வாசலை  அடைந்தோம்.
சொல்லி வைத்தாற்போல் காஞ்சியாரும் வருகைதந்துவிட்டார் ...
உடன் வந்தவரை ஓவியர் பின்டோ என்று அறிமுகப் படுத்தினார் .
கரம் குலுக்கி அறிமுகப்படுத்திக் கொண்டோம் .
இவர் தியாகராஜன் அண்ணாவை பல முறை வரைந்து
அதை அவர் தனது பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார் .

நாங்கள் காவலாளியிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தோம் .
விடுதி வளாகத்தை டையும் முன்னர் மாணவன் சந்தோஷும் எங்களுடன் இணைந்துகொள்ள அவனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினேன்.
பின்னர்  அனைவரும் ராஜசேகரன் பரமேஸ்வரன் அய்யா தங்கியிருந்த பகுதியை  அடைந் தோம் .

அறையின் கதவு திறந்தது ...ஓவியச் சாதனையாளர் முகம் தெரிந்தது .

எங்கள் வருகையை எதிர்பார்த்தாற்போல் அவர் வாசலுக்கே வந்து வரவேற்றார்.

நெடிய உருவம் ...உயரத்திற்கேற்ற உடல்வாகு .
மேல்நோக்கி அழுந்த வாரப்பட்டு போனி டெயிலாக்கப்பட்ட  தலை முடி .
முகத்தில் அடர்ந்த தாடியினூடே வெளிப்பட்ட குழந்தைத்தனமான சிரிப்பு ..சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கும் கண்கள் மூக்கு கண்ணாடியுடன் தெரிய ..
அடர் நீல நிற ( மயில் கழுத்துக்  கலர் ) ஜிப்பா என ஒரு ஓவியருக்கே உரிய எளிய தோற்றத்துடன் எங்களை கரம் கூப்பி வணக்கம் தெரிவித்து வரவேற்றார் அந்த சாதனை ஓவியர் .
நேரம் 6 மணியைத் தாண்டிய படியால் சூரிய ஒளி போவதற்கு முன் அவரை சந்தித்ததன் நினைவாக படங்கள் எடுத்துக்கொள்ள விரும்பி அவரிடம் தெரிவித்தோம் ( வரலாறு முக்கியமில்லையா பின்னே ...?)
செல்போனில் மாற்றி மாற்றி வேண்டிய வரைக்கும் க்ளிக்கித் தள்ளினோம் . பின்னர் எனது மனவண்ணங்கள் கவிதைத் தொகுப்பு நூலையும் நான் இயற்றிய மகாபாரதம் கவிதை நடை நூலையும் எனது அன்புப் பரிசாக ஓவியருக்கும் ,அண்ணாவுக்கும் அளித்து மகிழ்ந்தேன்.

பின்னர் எனது மாணவன் சந்தோஷையும் தனது காமிராவுடன் அங்கு வந்த சந்தோஷின் நண்பன் கோகுலையும்  [இவன் காட்சித் தொடர்பியல் ( அதாங்க ...விஷுவல் கம்யூனிகேஷன் ) இளங்கலை முதலாமாண்டு அதே கல்லூரியில் படித்துவருகின்றான் ]அவருக்கு அறிமுகப் படுத்தினேன்.

பின்னர் அறைக்குள் அனைவரையும் அழைத்துச் சென்றார் ஓவியர் .எங்களை அமர வைத்தார் .நாங்கள் அவரிடம் ஓவியக்  காலை தொடர்பாகவும் அவரது சாதனைகள் தொடர்பாகவும் உரையாடினோம் .

தனது கின்னஸ் சாதனைகள் குறித்த அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டார் .மேலும் தனது சமீபத்திய சாதனையான  ஏடாகூடம் பற்றியும்  அல்லாமல் அதன் மினியேச்சர் வடிவத்தையும் எங்களுக்கு காண்பித்தார் .

[ இது பற்றி தனி பதிவு போட வேண்டும் ...நேரம் இல்லாமையால்
 லிங்க்  கொடுத்துள்ளேன் ...ஆர்வமுடையவர்கள் லிங்கைக் கிளிக்குக ...விபரங்கள் அறிந்து மகிழ்க ]

 https://www.thebetterindia.com/126719/india-rubiks-cube-guinness-world-records/

https://en.wikipedia.org/wiki/Rajasekharan_Parameswaran#/media/File:Rajasekharan_Parameswaran-2016.jpg

https://www.facebook.com/rajasekharanp


எங்களுக்கு மிக  பிரமிப்பாக  இருந்தது .

அவர் வரையும் ஓவியங்கள் அத்தனையும் தத்ரூபமானவை .
பிரம்மாண்டமாய்   காட்சி தருபவை .
பென்சில் கொண்டு வெளிக் கோடுகள் ஏதும் வரைவதில்லை .
நேரடியாக வண்ணம் தீட்டுவது ...இவரது பாணி ...
அவரது ஓவியங்கள் அடங்கிய ஆல்பத்தினைக் காண்பித்தார் ...
அநேக ஓவியங்கள்  நான் முக நூலில்
அவரது பக்கத்தில் பார்த்து ரசித்தவை 
பிரம்மித்தவை
அவரது ஓவியங்கள் முன் கேமரா தோற்றுவிடுமோ
என்று நம்மை ஐய்யப்பட வைப்பவை ...
எனது நண்பர்களும் மாணவர்களும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .அது மட்டுமல்லாமல்
அவரது ஓவியங்கள் அட்டைப் படமாக
வெளியிடப் பட்டு  இருந்த சில வார, மாத இதழ்களையும் காண்பித்தார் .

இடைப் பட்ட நேரத்தில் ஓவியர் பின்டோ ஒரு புறமும்
 தனபால் ஒருபுறமும்  மனோகரன் ஒருபுறமும்
ராஜசேகரன் அய்யா அவர்களை சித்திரமாய் தம் பேனா மற்றும் பென்சில் கொண்டு கோட்டோவியங்களாக வரையத் துவங்கினர் .

                                                                                                           இன்னும் பகிர்வேன் ...


























































No comments:

Post a Comment