Tuesday 25 December 2018

திருநூலாற்றுப்படை -11

திருநூலாற்றுப்படை

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 11



பொதுவாகவே பயணங்கள் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை .பயணம் அறிவை விசாலமாக்கும் என்பது முதுமொழி .பயணங்கள் மேல் எனக்கு மற்றவர்களை விட ஓர் அலாதி ஈர்ப்பு உண்டு .என் வாழ்நாளில் பெரும் பாகத்தை பயணங்களுடன்தான் கழிக்கிறேன்.எனது பணியும் கூட நிறைய பயணங்களை எனக்காக சாத்தியமாக்கித் தருகின்றது .
எனது நூலகத்தில்கூட பயணம் சார்ந்த கட்டுரை நூல்களுக்கு தனியாக ஓர் இடமும் உண்டு.பயணக் கட்டுரைகள் எப்போதும் என்னை ஈர்த்து வருபவை.
நான் சிறு வயதில் படித்து மிகவும் ரசித்த சிந்துபாத் கதைகள் கூட அவனது கடல் பயணம் சார்ந்தவைதானே ..!
நெ.து.சு, கல்கி, பரணீதரன் தொடங்கி சமீபத்திய சமீபகாலங்களில் எழுதிவரும் டாக்டர்.சுதா சேஷையன் வரை பலரது பயணக்கட்டுரைகள் இன்னமும் வாசகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகின்றன.
பயணம் ஒரு வித போதை .
எஸ்.ரா வின் ' தேசாந்திரி ' எனக்குள் ஒரு மயக்க உணர்வையே உண்டாக்கியிருக்கிறது.
நாம் நம் சிறு வயதில் வரலாறு புத்தகங்களில் வாசித்த கொலம்பஸ்,மார்க்கோபோலோ ,
வாஸ்கோடகாமா,யுவான் சுவாங் இவர்களெல்லாம் யாத்ரீகர்களே .
இந்த நூலும் இவர்களைப் பற்றிய ,இவர்களைப் போன்ற பயண ஆர்வல்களைப் பற்றிய ,
இவர்களின் கடற்பயண அனுபவங்கள் பற்றிய தொகுப்பே .
விகடன் குழும நூல்களுள் ஒன்றான சுட்டி விகடனில் தொடராக வந்த கட்டுரைகள் அழகுறத் தொகுக்கப்பட்டுள்ள பொக்கிஷம்தான் இந்நூல்.இதில் குறிப்பிடப்பட்டுள்ள பயணங்கள் ஒவ்வொன்றும் உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தவை.
பயணங்கள் எதையெல்லாம் சாதித்தன என்பதையெல்லாம் பாதை எனும் தனது முன்னுரையில் பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர்.
உண்மையில் புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்படக் காரணமே கணற்பயணங்கள்தானே!
எனக்கும்கூட வாழ்வில் ஒருமுறை கடலில் ,கப்பலில் பயணிக்க ஆசை உண்டு .இதற்குமுன் ஒரு இயந்திரப்படகேறி குமரிக்கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கும் ,திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வந்திருக்கிறேன்.அது சில மணி நேரப் பயணமே ! மற்றொருமுறை பிச்சாவரத்திற்கு அருகில் உள்ள எம்ஜியார் திட்டு என்னும் இடத்திற்கும் சென்றுள்ளேன்.இதெல்லாம் ஒரு கடற் பயணமா என்று சிரிப்பது எனக்குத் தெரிகிறது. எனக்குமே கூட அதை எண்ணினால் சிரிப்பு வருகிறதுதான்.
ஆனால் எனது எண்ணம் வேறு .கப்பலில் ஏறி ஒரு நெடும்பயணம் செல்லவேண்டும்.ஏதேனும் ஒரு அண்டை நாட்டுக்கு .சிங்கப்பூர் ,மலேசியா போன்று . அல்லது குறைந்தபட்சம் நமது நாட்டிற்குட்பட்ட அந்தமான் ,நிக்கோபார் தீவுகளுக்கேனும் பயணம் செய்ய பேராவல்தான்.
கப்பலும் தயார். கடலும் தயார்.என்று இந்நூலின் நிறைவில் என் எரியும் ஆவலில் நெய்யூற்றுகிறார் மருதன்.ஒவ்வொரு அத்தியாயமும் ஆர்வம் தூண்டுகின்றன.
இடையிடையே பயணிகளின் படங்கள்வேறு.நிச்சயம் இந்நூல் உங்களைக் கவரும்.
பயணங்கள் முடிவதில்லை...!
ஆம் ,பயணங்கள் ஒருபொழுதும் முடிவதில்லைதான்.
கவுன்ட் டவுன் - 12 நாட்கள்.

No comments:

Post a Comment