Saturday 29 December 2018

திருநூலாற்றுப்படை - 15

சென்னைப் புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 15



உரிமைக்குரல் என்ற தலைப்பைப் பார்த்துமே ஏதோ எம்ஜியார் நடித்த படம் நினைவுக்கு வருகிறதா ?
ஆனால் இது மலாலாவின் கதை
இந்த உரிமைக்குரல் பெண் கல்விக்கு ஆதரவாக ஒலித்த மலாலா யூசஃப் சாய் எனும் சிறுமியின் குரல்.
தலிபான்களுக்கு அஞ்சி பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொண்ட பெண்குழந்தைகளின் ஒட்டுமொத்த குரல்.
பேசியே ஆகவேண்டும் என நினைக்கும் ,ஆனால் பேசவே முடியாத வலிமையற்றவர்கள் பலரின் குரல்.
ஆம்.பாகிஸ்தான் நாட்டின் ,ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த ஒரு சிறுமி தன்மீது பாய்ந்த ஒரு சிறு உலோகத் குண்டால் ஒட்டுமொத்த உலகின் கவனம் பெற்ற கதை .5000 ஆண்டுகளாக தங்களை பஷ்டூன்களாக பெருமிதத்தோடு அடையாளப்படுத்திக்கொள்ளும் பூர்வகுடிகளின் ஜோன் ஆப் ஆர்க் ஆக விளங்கிய மலாலாய் என்ற வீர மங்கையின் பெயரைக் கொண்ட நம் கதாநாயகியின் இக்கதை குங்குமம் தோழி இதழில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனம் கவர்ந்த கதை .
2014 ஆம் ஆண்டு இந்தியாவின் கைலாஷ் வித்தியார்த்தி அவர்களுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்ட ஒரு இளம் பெண்ணின் கதை .
ஏதோ ஒரு போராளியின் சராசரிக் கதையைப் போல ஒரு வரட்சியான நடையில் எழுதப்பட்டதல்ல இக்கதை .நீங்கள் நூலைத்திறந்து ,பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கின் பசுமைப்பாதைகளில் நுழைந்ததுமே மலாலாவின் மிங்காரோ என்னும் பெயருடைய கிராமத்துக்குள் சென்றுவிடுகிறீர்கள் .பின்னர் நிகழ்வதெல்லாம் ஒரு மாயாஜாலம்.மலாலாவின் தந்தை ' குஷால் பள்ளியின் ' நிர்வாகியும் தலைமையாசிரியருமான ஜியாவுதீனுடன் பழகுகிறீர்கள் .
மாணவர்களுடன் ,மாணவிகளும் சேர்ந்து பயிலும் அப் பள்ளிக்கு மலாலாவுடன் இணைந்தே பயணிக்கிறீர்கள்.
மலாலாவின் இரு தம்பிகளான குஷால் மற்றும் அடல் ஆகியோருடன் நாமும் மலாலாவுடன் சேர்ந்து விளையாடுகிறோம்.தாயார் டோர் பெகாய் இடம் மலாலாமலாலா தனது ஆசையைத் தயங்கித் தயங்கிக் கூறும்போது நாமும் திகைக்கிறோம்.ரேடியோ முல்லாவின் கரகரப்பான குரல் நமக்கும் கேட்கிறது .அங்கு நிலநடுக்கம் ஏற்படுகையில் நம் காலடியிலும் பூமி தட தடக்கிறது .தலிபான்களின் துப்பாக்கிச் சத்தம் நம்மையும் நடுங்கச் செய்கிறது .வெடிகுண்டுச் சத்தத்தில் அதிர்வது அந்த கிராமம் மட்டுமல்ல ..நம் உடலும் மனமும் கூடத்தான்.ஒரு கட்டத்தில் மலாலாவின் உடலைத் துளைத்த குண்டு நமது உடலில் பாய்ந்ததாகவே கருதுகிறோம்.
அவள் மனதில் தோன்றும் ஒரு கேள்வி ' என் பெட்டியைத் திறந்து நான் உடுத்தும் ஓர் ஆடை ஏன் இறைவனை உறுத்தவேண்டும்.?ஆடைகளுக்கு எதற்கு திசைகளின் முத்திரை ?வடக்கு மேற்கு என்றெல்லாம் ஒரு சல்வார் கமீசைப் பிரித்துவிட முடியுமா ' என்பது போன்ற அப்பாவித்தனமான அதே நேரம் புரட்சிகரமான வினாக்கள் நம்மையும் மலைக்க வைக்கின்றன.
புறாக்கள் பறக்கும் உலகமல்ல ;தோட்டாக்கள் பறக்கும் உலகமே உங்களை விசாலப்படுத்துகின்றது ...
இது கற்காலமல்ல ...ஆனால் அங்கேதான் நாம் திரும்பிக்கொண்டிருக்கிறோம் ...
அது சத்தியத்தின் குரல்..அதனால்தான் அத்தனை கம்பீரமாக ஒலிக்கிறது ....
பள்ளிக்கூடம் என்றால் குழந்தைகள் நத்தைபோல் ஊர்ந்து நகர்வார்கள்.
மாலை மணியடித்ததும் சிட்டாக்வீட்டிற்குப் பறப்பார்கள்.நாடு,கண்டம் ,மொழி, இனம், வயது வித்தியாசம் கடந்து உலகம் முழுதும் உள்ள குழந்தைகள் கடைப்பிடிக்கும் பொதுவிதி ...
என்பதான வாசகங்கள் நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன.
ஹாரி பாட்டருடன் மலாலாவை ஒப்பீடு செய்து துவங்கும் முதல் அத்தியாயம் தொடங்கி அடுத்து மலாலா என்ன செய்யப் போகிறார் என்று நாம் பார்க்கத்தான் போகிறோம் என்று நிறைவடையும் இறுதி அத்தியாயம் வரை மிக சுவாரஸ்யமாகச் செல்லும் இந்நூல் எடுத்து படிக்க ஆரம்பித்தால் முடித்துவிட்டு மூடிவைக்கும் நூல்களின் வரிசையில் இடம்பிடித்துவிடுகிறது.
எனது மனைவியிடமும் , தாயாரிடமும் வசவுச் சொற்களை வாரிக் கட்டிக்கொண்டு வாசித்து முடித்தபின்தான் ஒருவழியாக உணவருந்தவே அமர்ந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்....!
"நீங்கள் ஏன் எதுவுமே செய்வதில்லை என்று மற்றவர்களைப் பார்த்து மட்டுமே கேட்கும் சிலர் இங்கு இருக்கிறார்கள்.நாம் ஏன் மற்றவர்களுக்காகக் காத்திருக்கவேண்டும்.?
நான் ஏன் ஓர் அடி முன்னால் வைக்கக்கூடாது ?
மக்கள் அமைதியாக இருந்தால் எந்த மாற்றமும் நிகழாது "
_மலாலா .
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் 

No comments:

Post a Comment