Sunday 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...9

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 9


மனக்குகைச் சித்திரங்கள் என்னும் இந்நூல் ஒரு டைரிக்குறிப்பு எனலாம்.
ஆனால் மனமெனும் நாட்குறிப்பில் எழுதப்படாத நினைவலைகளாய் உறைந்துபோன சம்பவங்களாய் நம் ஒவ்வொருவரின் நினைவுப் பக்கங்களிலும்
பதிந்துபோய்க் கிடக்குமே ...
அவ்வப்போது காலமெனும் கோழி இரக்கமற்றுக் கிளறும்போது இலேசாக எட்டிப்பார்த்து நம்மை நிகழ்காலத்தில் இருந்து தடக்கென இறந்த காலத்திற்குள் இழுத்துப்போட்டு கால வெள்ளத்தில் நினைவலைகளில் நீச்சலிடவைக்குமே ....
நமது இருண்ட மனக்குகையின் சொரசொரப்பான சுவர்களிலே காலச்சுவடுகளால் மங்கிய வரிவடிவச் சித்திரங்களாய்த் தங்கிவிட்ட நம் வாழ்வில் பயணத்தின் இடையில் சந்திக்கும் ,குறுக்கிடும் ,இடறிவிழும் ,எந்த எதிர்ப்பும் இன்றி வாஞ்சையாய் தலைவருடும்,கனவில் கண்ட காட்சிகளாய், புகைவடிவங்களாய் மறைந்து போய் மங்கலாகும் மனிதமுகங்களின் மீட்டுருவாக்கச் சிந்தனைகளின் நூல்வடிவம்தான் இந்நூல்.
மானுடம் என்னும் அந்த ஒற்றைச் சொல் இன்னமும் உயிர்ப்போடுதான் இருக்கிறதா ஆத்மார்த்தி என்ற மாலன் அவர்களின் வினாக் கல்லுக்கு ஆத்மார்த்தியின் உள்ளக் குளத்தின் நினைவலையில் ஏற்பட்ட அதிர்வலைகள்...பதில்களாய்
மனக்குகைச் சித்திரங்கள் தொடங்கி
வாழ்தல் இனிதினும் இனிது என்று
வாழ்வைக்கொண்டும் வைரவரி அத்தியாயங்களோடு நிறைவடைவது இந்நூல் மட்டும் அல்ல ...வாசிக்கும் நம் மனமும் கூடத்தான் ...
பழையப் புத்தகக் கடை ஆறுமுகம்,
சாலையில் சித்திரம் வரையும் கந்தன்,
சித்தம் கலங்கித் திரியும் மல்லிகா அக்கா,
கிடைத்த வேலையைச் செய்யும் பாலமூர்த்தி அண்ணன் (இவருடைய அகதிக்கும் அனாதைக்கும் வித்தியாசம் இருக்குதுதானே என்ற கேள்வி வாசிக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் விழும் அடி)
எனத் தொடங்கி ஆசிரியை அகிலா ...
பரமண்ணே என விளிக்கப்படும் பரமசிவம் ...
என இன்னும் இன்னும் இந்நூலெங்கும் இருபத்தொரு அத்தியாயங்கள் வழியே நம்மோடு உறவாடும் மனிதர்கள்....
இவர்களெல்லாம் ஏதோ ஆத்மார்த்தி சந்தித்த ஜீவன்கள் என்றா நினைக்க முடிகிறது ...?
இல்லையில்லை ...நாம் ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி அங்குமிங்கும் சந்திக்கிற சாதாரண மனிதர்கள்தான்.
இந்த நூல் ஒரு மெழுகுவர்த்தி .இதனைக் கையில் ஏந்துங்கள்...
உங்கள் மனமெனும் குகைவழி உள் நுழையத் தொடங்குங்கள் ...
உள்ளே பயணிக்க பயணிக்க வழிநெடுகிலும்
குகைச் சுவரில் தீட்டப்பட்ட சித்திரங்களை
இந்நூலின் வெளிச்சம் உங்கள் அகக் கண்களுக்குக் காட்சிப்படுத்தும்.
இது சத்தியமான நிதர்சனம்...!
நன்றி ஆத்மார்த்தி ரவிசங்கர் .
தொடர்புக்கு :9524727000
பின்குறிப்பு : இவர் முகநூலிலும் எனது நட்பு வட்டத்தில் இருக்கிறார்...ஆனால் இப்பொழுதெல்லாம் இவரது பதிவுகள் காணக்கிடைப்பதில்லை .ஒருவேளை unfriend ஆகியிருக்கலாம்.

No comments:

Post a Comment