Sunday 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...4

சென்னை புத்தகத் திருவிழா -2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம்-4
கவிஞர் ,திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பற்றிய அறிமுகம் நான் செய்வது இங்கு சற்றே அதிகப் பிரசங்கித்தனமாகிவிடும்.
எனவே நேரடியாக நூலைப் பற்றி ..
செல்போன் வருகைக்கு முன்னர் நம் உயிரொடு உயிராக ,ஆத்மார்த்தமாகக்
கலந்திருந்த மிக நெருக்கமான உறவுகள் எல்லாம் ,இந்த செல்போன் என்னும் மாய அரக்கனின் வருகைக்குப்பின் மிக அன்னியப்பட்டு வெகுதூரம் போய்விட்டன என்பது நாம் அனைவருமே அறிந்திருக்கின்ற அனுபவ உண்மைகளுள் ஒன்று .
அம்மா ,அப்பா தொடங்கி அக்கா ,தங்கை என வளர்ந்து ,சித்தப்பா ,அத்தை எனத் தொடர்ந்து ,ஆயா ,தாத்தா என உயிர்த்து மனைவி ,மகன் என நிறையும் நம் ஒவ்வொருவரின் வாழ்வியலோடும் பிரிக்க இயலா வகையில் பின்னிப் பிணைந்துவிட்ட அத்தனை இரத்த உறவுகளின் நினைவுகளை நம் மனதின் பக்கங்களை மயிலிறகால் வருடித்திறக்கும் ஒரு சிலிர்ப்பான , ஆகச்சிறந்த ஒரு பதிவுதான் இந்த நூல்.
விகடனில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை உணர்வுக் கடலில் மூழ்கடித்து கண்ணீர்த்துளிகளை விழியோரம் முத்தெடுக்க வைத்த முத்துக்குமாரின்
முத்தான இந்த பதிவு ஒரு தொகுப்பு நூலாய் பிறப்பெடுத்தது அக்டோபர் 2011ல்.
ஆனால் எனது கரங்களில் தவழும் இந்நூல் நவம்பர் 2017 ல் 12 ஆவது பதிப்பாக வெளியிடப்பட்டதாகும் .இடைப்பட்ட ஐந்து வருடங்களில் 10 பதிப்புகளைக் கண்டுவிட்தென்றால் இந்நூலுக்கு வாசக நெஞ்சங்கள் அளித்திருக்கும் வரவேற்பைப் பற்றி நான் கூறவேண்டுமா என்ன ?
குடும்பக் கட்டுப்பாடு ,நாமிருவர் நமக்கிருவர்,நாமிருவர் நமக்கொருவர் ,நாமிருவர் நமக்கேன் மற்றொருவர் என்று உறவுகளை அறுகச் செய்துகொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
உலகத்திலேயே பரிதாபமான ஜீவன்கள் உண்டென்றால் அது அத்தை , மாமா,பெரியம்மா ,பெரியப்பா , சித்தப்பா, சித்தி போன்ற தாயோடும் ,தந்தையோடும் ஒட்டிப்பிறந்த அற்புத உறவுகளே இன்றிப் பிறக்கப் போகும் அடுத்த தலைமுறையினர்தான்.
அவர்களுக்கான ஒரு மியூசியத்தின் புத்தக வடிவமே இந்த நூல் என்பேன் நான்.
மற்றபடி வேறென்ன சொல்ல .?
முக்கியமாக இன்னொன்று .
இந்நூலின் கடைசி அத்தியாயமான ,
முத்துக்குமார் தன் மகன் ஆதவனுக்கு எழுதிய கடித நடையிலான ' மகன் ' என்னும் அத்தியாயத்தை பள்ளிக் கல்வித்துறை ஒன்பதாம் வகுப்பின் தமிழ் பாடநூலில் ஒரு பாடமாக்கி முத்துக்குமாரின் தமிழ் நடையை இத்தலைமுறையின் மாணவச் செல்வங்களும் அறியும்படி செய்துள்ளது .
இதன் மூலம் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு ஒரு கௌரவத்தை வழங்கி தனக்குமேகூட பெருமையைத் தேடிக்கொண்டது ...!
முத்தாய்ப்பாக சேரனின் ' ஆட்டோகிராப் ' நம் ஒவ்வொருவரின் காதலுக்கானது திரைவடிவம் என்றால்...
முத்துக்குமாரின் ' அணிலாடும் முன்றில் '
நம் ஒவ்வொரு உறவுகளுக்கான புத்தக வடிவம்...!
நூலை வாங்கி வாசித்துக் கண்மூடுங்கள்
உங்கள் மனத்தின் முன்றிலில் அணிலாடும் என்பதும் நிச்சயம்..

No comments:

Post a Comment