Sunday 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...2

#சென்னைபுத்தகத்திருவிழா -2019
சிறப்புப் பகிர்வு .
நூல் அறிமுகம்-2



கலகலவகுப்பறை சிவா முகநூல் மூலம் ஆசிரியர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.பதிவுகள் எல்லாமே மாணவர் நலன் ,கல்வி வளர்ச்சி ,
பள்ளிச் சூழலை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வதானதாகவே இருக்கும்.ஒரு ஓவியரும் கூட.மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறைகளையும் பரீட்சார்த்தமான முயற்சியாக அவ்வப்போது நடத்தி வருகிறார்.
கற்பித்தல் நிகழ்வானது வகுப்பறையில் மட்டுமல்லாது வெளிச்சூழல்களிலும் நிகழவேண்டிய ஒன்று என்னும் கருத்தைக் கொண்டவர்.இக்கருத்தை
வலியுறுத்துவதற்காகவே
' கலகலவகுப்பறை ' என்னும் அமைப்பையும் நிறுவி நடத்திவருகின்றார்.
உண்மையில் பார்க்கப் போனால் வகுப்பறைச்சூழலில் கற்றுக்கொள்வதைவிட வெளிச் சூழலில்தான் ஒரு மாணவன் அதிகம் கற்றுக்கொள்கிறான் என்பதே நிதர்சனம் கூட.இதை என் அனுபவத்திலும் நான் நன்கு உணர்ந்துள்ளேன்.
திரைப்படம் ஒரு அற்புதமான கருவி.அதனை எங்ஙனம் கற்பித்தலுக்கு உத்வேகம் ஊட்டும் கருவியாகப் பயன்படுத்தலாம் என்பதனை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் சிவா.ஆசிரியர்கள் கண்டு சிலாகிக்கவும் ,
தமது வாழ்விலும் நடைமுறைப்படுத்துவதற்கு
ஏதுவான வகையிலும் ,தம் பணியில் தொய்வு ஏற்படும்போதோ ,சிறிது மனச் சோர்வு ஏற்படும் காலத்தோ அவைகளை நீக்கிக்கொண்டு தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொள்ள
உத்வேகம் ஊட்டிக்கொள்ள
பார்க்கவேண்டிய திரைப்படங்கள் சிலவற்றை இந்நூலில் முன்மொழிந்துள்ளார்.
உலகத் திரைப்படங்களுள் சில ..பெரும்பான்மையான ஆசிரியர்களால் ,
கல்வியாளர்களால் சிலாகித்துப் பார்க்கப்பட்ட பலமொழித் திரைப் படங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
2015 ல்பிரெஞ்சுப்படமும் எனத் (சீருடை )என்ற மராத்தி மொழிப் படத்துடன் துவங்கும் முதல் அத்தியாயத்தைத் தொடர்ந்து மன்சூர் லாசர் என்னும் கனடியன் பிரெஞ்சுப்படம் எனத் தொடர்கிறது .
Shikshanachya Acha Gho
(Marathi)
The Teacher's Diary (Thai)
72 Miles -Ek Pravas (Marathi)
The Ran Clark Story (English)
Gridiron Gang (English)
Mr.Holland's Opus (English )
என பார்த்து பார்த்து தந்திருக்கிறார்.
ஒரு ஆசிரியராக நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் ,ஏன் அதைவிடவும் அதிகமாகவே இந்தப் படங்களிலும் விரவிக் காணப்படுகின்றன.
இன்றைய சமூகத்தின் சிறந்த மனிதர்களை உருவாக்க விரும்பும் ஒரு ஆசிரியர் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது பரவலான கருத்து .அதையே தனது முன்னுரையிலும் முன்மொழிந்திருக்கும் சிவாவின் கருத்தை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் வழிமொழிவர் என்பதில் ஐயமில்லை .
ஒரு ஆசிரியர் தன்னைப் புதிப்பித்துக்கொண்டேயிருக்க பல வழிகள் உள்ளன.அவற்றுள் முதல் வழி நல்ல நல்ல நூல்களை - அதுவும் குறிப்பாக கல்வி ,ஆசிரியர், மாணவர்,பள்ளிச்சூழல்களை பேசுபொருள்களாகக் கொண்டுள்ள நூல்களைத் தேடி வாசித்தல்தான்...!
அடுத்ததாக கல்விசார்ந்த உரையாடல்களை கதைக்களன்களாகக் கொண்ட காட்சிகளை படமாக்கிக் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாக்கும் திரைப்படங்களும் ,
குறும்படங்களும்தான் எனபதனையே கலகலவகுப்பறை சிவா இந்நூல் மூலம் ஆற்றுப்படுத்துகிறார்.
இதில் இந்தி மொழியில் வெளியான தாரே ஜாமீன் பர் என்ற பிரபலப் படத்தைக் குறிப்பிடாதது ஒரு குறைதான்.இவற்றைப் பார்க்கும்போது இது போன்ற படங்களுக்கு தமிழில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் நன்கு புரிகிறது .
பசங்க ,
பசங்க -2 ,
அப்பா ,
சாட்டை,
அம்மா கணக்கு ,
குற்றம் கடிதல்
போன்ற படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
வசூல் ரீதியாக வெற்றியடைவதை கருத்தில் கொள்ளாமல் தமிழ் திரையுலகம் எடுத்தால் வருங்காலம் வளப்படும்.பார்ப்போம்.
அடுத்ததாக கல்வித்துறைக்கும் ஒரு ஆலோசனை. இந்த நூலில் குறிப்படப்பட்டுள்ள அல்லது இதுபோன்ற படங்களை , குறும்படங்களை தேடிப்பிடித்து அவற்றை ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்களில் திரையிட முயற்சிப்பதன் மூலம் இதுபோன்ற படங்களை பெரும்பான்மையான ஆசிரியர்களை சென்றடையச்செய்யலாம்.நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும்.முக்கியமாக பயிற்சி நடக்கும்போதே சமோசா ,தேனீர் அருந்தச் செல்ல எத்தனிக்கும் ஒரு சில ஆசிரியர்களையும் பயிற்சியிலேயே அமர வைத்துவிடும்.யோசிக்க்குமா கல்வித்துறை ?
மற்றபடி கல்வி சார்ந்த இது போன்ற நூல்களை சிவா அவர்கள் நிறைய படைக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் சிவா ...!
கவுன்ட் டவுன் ....
இன்னும் 21 நாட்கள்...


No comments:

Post a Comment