Tuesday 25 December 2018

திருநூலாற்றுப்படை -13

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் -13



இசையால் வசமாக இதயம் எது ...?
இறைவனே இசை வடிவம் எனும்போது ...!
இந்த இருவரிகளுமே இசையையும் மனிதர்தம் இதயத்தையும் இருவேறாகப் பிரிக்கமுடியாது என்பதைத்தான் இயம்புகின்றன்.
காற்று ,நீர்,உணவு , போன்றே இசையும் உலகெங்கும் உள்ள மக்களால் நாடு, இன,மத,மொழி பேதமின்றி நுகரப்படுகின்றது எனலாம்.எந்த ஒரு கலையையும் தனக்குப் பிடிக்கவில்லை என ஒருவன் ஒதுக்கினாலும் அவனால் இசையை மட்டும் பிடிக்கவில்லை என நிச்சயம் ஒதுக்கிவிட இயலாது .ஏனெனில் அவன் வாழ்வே இசையால் பாடல்களால் பின்னிப் பிணைந்தவையன்றோ .பிறப்பிலே தொடங்கும் தாலாட்டும்,திருமணத்திலே இசைக்கும் மங்கள இசையும் இறப்பிலே ஒலிக்கும் சேகண்டியும் ஓலமிடும் சங்கும் வைக்கும் ஒப்பாரியும் என இசையில் தொடங்கி இசையில் நிறையும் வாழ்வல்லவா அது ...?
தங்களுக்குள் ஆயிரம் கருத்து பேதங்களைக் கொண்டுள்ள மதங்கள் தமக்குள் ஒரு ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
இறைவனுக்கு இசையால் தொடுத்த
பாமாலையால் நடத்தும் வழிபாடுதான் அது .
எனக்குமேகூட இசையின்மேலுள்ள காதல் ,வெறி ,பைத்தியம் இவற்றையெல்லாம் எனது #இசைப்_புராணம் என்னும் தொடர்பதிவில் குறிப்பிட்டுஇருந்தேன்.எழுந்தவுடன் என்னுடன் இசையும் விழித்துவிடும், குளியலின்போதும்,
கடவுளை வழிபடும்போதும்,
உணவருந்தும்போதும்
என்வீட்டு டேப்ரெகார்டரோ அல்லது பண்பலையோ இணைத்துக்கொண்டுதான் இருக்கும் .ஏதாவது நூல்களை வாசிக்கும்போதும்கூட மெல்லிய ஒலியில் (பாடல்களற்ற,வார்த்தைகளற்ற ) வெறும் கருவி இசைமட்டும் ஒலித்துக் கொண்டிருக்கும்.இரவில்
உறங்கும்வேளையில்கூட இதே கேட்டு உறங்குவதையே என் கண்கள் இன்றளவும் வாடிக்கையாக்கிக்கொண்டுள்ளன.நான் உறங்கியபின்னரே எனது டேப்ரெகார்டர் ஆட்டோஸ்டாப்பாகி உறங்கச்செல்வது வழக்கம்.இதோ இதை நான் டைப்பும்போதும்கூட திருவெம்பாவை ஒலிப்பேழை பின்னனியில் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றது.
நிற்க ....
நாம் நூலிற்குள் நுழைவோம் ...
கர்னாடக இசை ,சாஸ்திரீயஇசை ,
ஹிந்துஸ்தானி இசை ,
மேற்கத்திய இசை ,நாட்டுப்புற இசை ,என பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு நூற்றாண்டு காலமாக திரையிசைதான் மக்களை முழுமையாக ஆட்கொண்டிருக்கிறது .அதுவும் இளைஞர்கள் ,நடுத்தர வயதினர் என்று தன் காதுகளில் ஹெட்போனை செறுகிக்கொண்டு சாலையில் நடப்போரையும் ,இருசக்கர வாகனங்களில் விரைவோரையும் ,பேருந்துகளிலும் ரயில் வண்டிகளிலும் உடன் பயணிப்போரையும் பார்த்தாலே நமக்கு விளங்கிவிடும் திரையிசை நமது மக்களை பாடாய் படுத்துகிறது ; பேயாய் பிடித்து ஆட்டுகிறது என்று.திரைப்படப் பாடல்கள் இன்றைய தலைமுறையைச் சீரழிக்கின்றன என்று பரவலான ஒரு சமூகக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.இந்த நூலில் இதை அழகாக ,ஆணித்தரமாக மறுதளிக்கிறார்.
தீ , மின்சாரம் உள்ளிட்டவை போல அனைத்திலுமே நன்மையும் உண்டு தீமையும் உண்டு ..நாம் அவற்றை பயனாக்கிக்கொள்ளாமலா இருக்கிறோம் .தீயன விலக்கி நன்மையைப் பெறுவதில்லையா ....குடிப்பதற்கே அருகதையற்ற கடல்நீரிலிருந்துதானே உணவுக்கு சுவைகூட்டும் ,உடலுக்கு நலம் சேர்க்கும் உப்பைப் பெறுகிறோம் என வினவி, அன்னம் பாலொடு கலந்திட்ட நீர்க் கலவையிலிருந்து நீரை விடுத்து பாலை மட்டும் பருகுவாற்போன்று நாமும் திரைப்படங்களில் இருந்தும் ,
திரையிசைகளிலிருந்தும் தீயன விலக்கி நன்மை தரும் , நம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் ,மனதிற்கு அமைதியும் ,உரமும் சேர்க்கும் நல்லிசையை ,நற்கருத்துக்களை
எடுத்துக்கொள்ள வழிகாட்டுகிறார் நூலாசிரியரின் தனது முன்னுரையில்.
இருபது தலைப்புகளில் ஆராய்ந்து ஒப்பு நோக்கி சுவைபடக் கட்டுரைகளாக்கி அருமையான விருந்து படைத்துள்ளார் நம் இரசனைக்கு .
திரையிசைப் பாடல்களை - பல்வேறு காலகட்டங்களில் ,பல்வேறு பாடலாசிரியர்களும் ,கவிஞர்களும் தந்திட்ட அரிய கருத்தாழம் மிக்க பாடல்களை நன்கு இரசித்து உள்வாங்கி ,ஆராய்ந்து இக்கட்டுரைகளை படைத்துள்ளார்.
திரையிசைகளில் காணப்படும் அல்லது பாடுபொருளாக் கொண்டு பாடப்படும்
பாடல்கள் உரைக்கின்றவற்றை அற்புதமாக வரிசைப்படுத்தியுள்ளார் .
சிறையில் பெற்ற ஞானம் தொடங்கி
திரையிசையில் உழைப்பாளர் பெருமை ,
மகளிர் நிலை ,
கம்பராமாயணம் ,
பறவைகளும் விலங்குகளும்,
எண்கள்,
நன்னெறிகள்,
நிலவு
தாலாட்டு
தாய்மை
தூது
இலக்கியங்கள்
கண்கள்
பணம்
சிரிப்பு
கதைப் பாடல்கள்
வாழ்த்துதல்
சகோதரபாசம்
கடவுள்
உவமை ஆகியவற்றை ஆராய்ந்து ,ஒப்பிட்டு
தகுந்த பாடல்களோடு ஒரு மாலையாகவே கலைநயத்துடன் கோர்த்துள்ளார்.
பெரும்பாலான பாடல்களனைத்தும் அடிக்கடி நாம் கேட்டு ரசித்த பிரபலப் பாடல்களே .
உதாரணத்திற்கு திரையிசையில் தூது என்ற தலைப்பில் ,திரைப்படங்களில்
இடம்பெற்ற கடிதத் தூது ,தென்றல் தூது ,நிலவுத் தூது உள்ளிட்ட பல தூதுப்பாடல்களை சுட்டிக்காட்டுகிறார் ..
அனைத்துமே நாம் கேட்டு இரசித்த பாடல்கள்தான்.
அன்புள்ள மான்விழியே ...
(குழந்தையும் தெய்வமும்)
நான் அனுப்புவது கடிதம் அல்ல ...
(பேசும் தெய்வம்)
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே..
(பாவை விளக்கு)
பொன்னெழில் பூத்தது புதுவானில்...
(கலங்கரை விளக்கம்)
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா..
(உயர்ந்த மனிதன்)
வெண்முகிலே கொஞ்சம் நில்லு ...
(விக்கிரமாதித்தன்)
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ..
(கலங்கரை விளக்கம்)
அந்த சிவகாமி மகனிடம் தூது சொல்லடி...
(பட்டணத்தில் பூதம்)
தூது சொல்ல ஒரு தோழி இல்லயென ...
(பச்சை விளக்கு)
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை ....
(அச்சமில்லை அச்சமில்லை )
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ...
(பெரியவீட்டுப் பண்ணைக்காரன்)
என்று பட்டியலிடப்பட்ட பாடல்களில் நான் எதிர்பார்த்த சில பாடல்களை காணவில்லை
தூது சொல்வதாரடி ....
(தேவர்மகன்)
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு ....
( ஈரமான ரோஜாவே )
ஓ ..தென்றலே ..ஒரு பாட்டு பாடு ..
( சந்தனக் காற்று )
இது உதாரணத்திற்குத்தான் ...எனில் நூலில் இடம்பெற்றுள்ள தலைப்பிற்கான பாடல் வரிசைகளை நீங்களே ஊகம் செய்துகொள்ளலாம் .
எனது முன்னிளமைக் காலங்களில் நிலாப் பாடல்கள் வரிசையில் நான் தெரிவு செய்து, ஒலிப்பேழைகளில் பண்ணுருட்டி ஸ்ருதி மியூசிக் நடராஜனிடம் பதிவுசெய்து வாங்கிய பாடல்கள் அனேகமாக நாற்பதுக்கும் மேலிருக்கும்.இரண்டு நைன்ட்டி கேசட்டுகளில் பதிவு செய்து தந்தார்.மேலும் தென்றல் எனும் தலைப்பில் இருபது பாடல்களை பதிவு செய்து வந்ததெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றது .
இந்நூலை நீங்கள் வாசித்ததும் திரைப்படப் பாடல்களின் மீதான உங்கள் பார்வையும் இரசனையும் நிச்சயம் வேறொரு தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்வது நிச்சயம் ...!
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 9 நாட்கள் .

No comments:

Post a Comment