Monday 31 December 2018

திருநூலாற்றுப்படை - 19

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நால் அறிமுகம் - 19



சுப்ரபாரதிமணியன் திருப்பூரைச் சேர்ந்தவர் .
சாகித்ய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருப்பவர்.ஏராளமான புதினங்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ள இவரது ' சாயத்திரை ' என்னும் நாவல் N.C.B.H கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது .இவரது பல நூல்கள் பல்கலைக் கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னமும் கூட இதே போன்றதொரு தலைப்பில் நூலொன்றினை அறிமுகப் படுத்தியுள்ளதாக நினைக்கின்றீர்களா ...!
ஆம் ..! அது மனக்குகைச் சித்திரங்கள் ..!ஆத்மார்த்தி தீட்டியது !
இது மனக்குகை ஓவியங்கள் ...
சுப்ரபாரதிமணியன் தீட்டியது ...!
இரண்டு நூலுக்கும் ஒரேமாதிரி தலைப்பு சற்றே குழப்படியாக அமைந்தது துரதிர்ஷ்டமே !ஆனால் புத்தகம் வெளியிடப்பட்ட காலத்தைக் கருதும்போது சுப்ரபாரதிமணியன் முந்திக்கொண்டவராகிறார்...!
ஆத்மார்த்தி நாம் அன்றாடம் சந்திக்கும் ,நம் வாழ்வில் தவிர்க்க முடியாத சில மனித உருவத் தீற்றல்களை நமது மனக் குகைக்குள் தேடவைக்கிறார்.
ஆனால் சுப்ரபாரதிமணியனோ தமிழ் இலக்கிய உலகில் ...புத்தகப் பேரண்டத்தில்... ஒர் வாசகன் தவிர்க்கவே இயலாத எழுத்தாளர்களுள் சிலரது எழுத்துக்களின் வீச்சை ..அவர்களது கதாவிலாச முகவரியை.. ஒரு எழுத்தாளன் என்பதைத் தாண்டிய ஒரு வாசகனாய் ..
சில நேரங்களில் அவர்களோடு பழகிய தருணங்களில் அவர்களது வாழ்வை உள்வாங்கிய நேசனாய் ...
எட்டி நின்று பார்க்கும் ஒரு பார்வையாளனாய்...தன்னையும் பாவித்துக்கொண்டு, தனது மனக்குகைகளில் ஓவியங்களாக்கிக் காட்டி ..
நம்மையும் அவ்வாறே
அந்தப் படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகளையும் அணுகவும் ...
அந்த அனுபவ வண்ணங்களைத் நமது எண்ணம் என்னும் தூரிகையால் தொட்டுத் தொட்டு நமது மனக்குகையின் சுவர்களிலே ஓவியங்களாகத் தீட்டவும் வைத்துவிடுகிறார்.
பாரதியார்,புதுமைப்பித்தன், சுந்தர்ராமசாமி,
தோப்பில் முகமது மீரான்,நகுலன்,தகழி சிவசங்கரன் பிள்ளை , ஞானி,சா.கந்தசாமி, சுஜாதா, துறைவன்,திலகவதி,வைரமுத்து ,
தங்கர்பச்சான் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆளுமைகளின் எழுத்து வடிவங்களை தனக்கேயான பாணியில் அலசியுள்ள அற்புதமான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
இக்கட்டுரைகள் நம்மையும் அவரது விழிகள் வழியே ஒவ்வொரு எழுத்தாளனையும் காணவைக்கிறது ...
குறிப்பாக எழுத்தின் நடைகளில் காணப்படும் வறட்டுத்தனம் வியாபார நோக்கம் கொண்ட படைப்பாளிகளை எரிச்சலடையச் செய்வதும் ..வாழ்வின் தரிசனமாய்க் கண்டதை தனது படைப்புகளின் மூலம் முன்னிறுத்துவதும் ...சுந்தரராமசாமியின் வாழ்நாள் இலக்கியப் போராட்டமாக இருந்தது என்ற சிறு பத்தி ஒன்றே போதும் இந்நூலடக்கத்தின் கனபரிமானத்தை உணர்ந்து நோக்க .
*வாசிப்பு அனுபவம் மூலம் வெவ்வேறு மனிதர்களுடன் உறவாடும் வாய்ப்பைத் தருகின்றது ...
*இன்றைய இலக்கியச் சூழல் அருவருப்ப தருவதாய் ,அயற்சி தருவதாய் உணரும் பலர்
வாசிப்பும் படைப்பு அனுபவமும் தருகிற மீட்சியை முழுமையாக நிராகரித்துவிட்டு தற்காலிக கேளிக்கைகளில் அமிழ்ந்துபோகிறார்கள்...
*படைப்பாளியின் களத்தையும் அனுபவங்களையும் விசாலமாக்கிக்கொள்ளவும் ,வித்தியாசமாக்கிக்கொள்ளவும் முயற்சியும்,தேடலும் தொடர்ச்சியான வாசிப்பும் தேவைப்படுகின்றன.
*இந்திய சமூகத்தின் ஆணிவேராகப் பாதுகாக்கப்படவேண்டிய கூட்டுக்குடும்ப அமைப்பு என்பது இன்று சுலபமாய் விடுபட்டு வருகின்றது .
*அரசாங்கம் வறுமை நிலையிலிருந்து நிவாரணம் தரமுடியாதபோது குழந்தைத் தொழிலாளர் நிலை முன்னிறுத்தப்பட்டு
கட்டாயக் கல்வி புறக்கணிக்கப்படுகிறது .
*எழுத்து வாசிப்பு என்பது ஒரு பயணம் போன்றது .சொல்லாடல்கள் மூலம் எழுத்தாளன் வெளிப்படுத்தும் பிரதேசம்,மக்கள் வாழ்க்கை,
இயற்கைச் சூழல் , அனுபவங்கள் சார்ந்து அவற்றினூடே பயணம் செய்யும் வாசகன் ஒரு படிமத்தை உருவாக்கிக்கொள்கிறான்.
* எளிமையான சொற்கள் மூலம் தனக்கான பிரம்மாண்டமான உலகைப் படைப்பது ; பெரும்பாலும் காட்சி ரூபத்தன்மையில் சாதாரண வாசகனுக்கும் இணக்கமாய் இருப்பது ..
இதுபோன்ற அவரது பார்வைகள் இந்நூல் முழுவதுமே தூவிக் கிடப்பதைக் காணமுடிகிறது...
இந்நூலை வாசிக்கும் ஒருவர் நிச்சயம் ஏதோ ஒரு புரிதலுக்கான புள்ளியில் வாசகன் என்ற நிலையிலிருந்து எழுத்தாளன் என்கிற நிலைக்கும் பரிணமிக்கக்கூடும்.
ஆனால்...
எழுத்தாளர் நகுலனுடனான சந்திப்பில் இவர்களின் பேச்சுக்கு
நகுலனின் தொடர்பில்லாத பதில்கள்
என்று பட்டியலிடப்பட்டிருக்கும் முப்பத்து மூன்றில் ,முதலாவதாக உள்ள பதில் இன்னமும் கூட என்னை உறங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருக்கறதே ...ஏன்...?
சின்னக் குழந்தையெ எண்ணெயில் போட்டு முறுவலா ரோஸ்ட் பண்ணி சாப்புடனும் .
என்ன மாதிரி மனநிலையில் இருந்தார் நகுலன்...? நல்லவேளை..நகுலன் இன்று இல்லை ..இருந்திருந்தால் நம் நெட்டிசன்களிடம் மாட்டி முகநூல்,ட்விட்டர், இன்ஸ்டா என அத்தனையிலும் வறுத்து ,ரோஸ்டாக்கி வைரலாகியிருந்திருப்பார் மனிதர்..!
கவுன்ட் டவுன் - 3 நாட்கள் .

No comments:

Post a Comment