Sunday 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...8

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 8



திரு .சொ.முத்துக்குமார் அவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைக் காசாளராக பணியாற்றி வருபவர்.பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர். எனது நண்பரும் கூட.நல்லதொரு பயண ஆர்வலர் .தொல்பொருள் தேடலி்ல் ஆர்வம் மிகக்கொண்டு அதுதொடர்பான பயணங்களை சலிப்பின்றி மேற்கொள்பவர் .அப்படிப் பெற்ற தனது பயண அனுபவங்களை ஆவணப்படுத்தி நூல்களாகவும் எழுதி வெளியிடுவதன் மூலம் மற்ற வரலாற்று , தொல்பொருள் ,பயண ஆர்வலர்களுக்கு அனுபவ ஆசானாகவும் நல்லதொரு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார் .அப்படிப்பட்ட அனுபவங்களின் தொகுப்புதான் இந்நூலும் கூட .
ஒவ்வொன்றுமே ஒவ்வொருவகையான அனுபவக் கட்டுரைகள்.தனது மகனோடும் மகளோடும் உரையாடும் பாணியில் எழுதப்பட்ட இந்நூலில் அவர் உண்மையால் உரையாடி உறவாடுவது நம்மோடுதான்.தனது நிறைய கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் என்னும் ஊரின் சிறப்பை விவரிக்கும் அத்தியாயத்தோடு தொடங்கும் இந்நூல் இரண்டாம் புத்தர் என அழைக்கப்படும்
ஸ்ரீ நாராயணகுரு என்னும் மகானின் வரலாற்றைத் தொட்டு பழையனூரின் சாட்சி பூதேஸ்வரரை வணங்கச் செய்து ,
தசரத் மான்ஜியின் மலைக்குடைவுப் பாதையில் நம்மை கரம் பிடித்து அழைத்துச் செல்கிறது .
பின்னர் Dead Sea என அழைக்கப் படும் சாக்கடலின் அதிசயச் செய்திகளை அறியச் செய்து பின்னர் பதினெண் சித்தர்களுள் ஒருவரான கோரக்கரின் ஜீவசமாதி அமந்திருக்கும் முகாசாபரூர் என்னும் தலத்தினை தரிசிக்கச் செய்து ,தென்னிந்திய அஜந்தாவான பனைமலைப் பேட்டையின் சித்திர அதிசயத்தைப் பருகச்செய்து ,குடவறைக் கோயில்களின் சிற்ப மகோன்னதங்களை ரசிக்கவைத்து பல்லவ மன்னர்களின் கலை தாகம் கண்டு மலைக்கவைக்கிறது.
தொடர்ந்து மேல் சித்தாமூர் சமணப் பள்ளிகளை ,சமண மடங்களை தரிசி்த்த கால்களை அங்கிருந்து நேராக திருவல்லிக்கேணி அருகில் உள்ள திருவெட்டீஸ்வரன் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது .நிறைவாக வேலுநாச்சியாரின் தியாகக் கதையைக் கூறி
வேலுநாச்சியாரின் வைரத் தாலியை தரிசிக்க சிவகங்கைக்கு அருகில் உள்ள
அரியாக்குறிச்சியில் தனது பயணத்தை இல்லை ...இல்லை ...நமது பயணத்தை பூரணமாக்குகின்றன இவரது கட்டுரைகள்.
இடையில் தகவல் இடைச்செருகலாக
செல்வச் சீமான் டாட்டா மற்றும் நாம் அதிகம் அறிந்திராத புரட்சி வீரர் பாலமுகுந்த் ஆகியோரது கதைகளையும் கூடுதலாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
மொத்தத்தில் நல்லதொரு பயணக் கட்டுரைகளை வாசித்த திருப்தி .
கவுன்ட் டவுன் - 15 நாட்கள் .

No comments:

Post a Comment