Saturday 29 December 2018

திருநூலாற்றுப்படை - 14


திருநூலாற்றுப்படை - 14

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூலறிமுகம் -14




ஓடோடிக் கடந்துவிடும் நமது வாழ்வின் வசந்தகாலமான பள்ளிப்பருவம்...
அது ஒரு கனாக்காலம்..
நாம் நினைந்து நினைந்து மகிழும்
மாணவப் பருவ நினைவலைகளி்ல் நம் மனதில் வந்து மோதுவது ,
நம் உணர்வில் கலந்திட்ட ....
பள்ளியில் நம்மோடு ஒன்றாய்ப் பயின்ற, பதின் பருவ நண்பர்கள் மட்டுமல்ல ..
தனது கற்றல் முறைகளால் ,தனது அன்பான
அரவணைப்பால்,அன்போடு தோளில் கரமிட்டுக் கூறும் ஆலோசனைகளால் ,சிரிக்க சிரிக்கக் கதைகள் கூறி வகுப்பறையை இனிய சூழலாக்கிய தருணங்களால் ,
கண்டிப்பாக அதே நேரத்தில் கருணையோடு நம்மை நடத்திய விதத்தால்,
நமது தனித்திறன்களைக் கண்டறிந்து அவற்றை பட்டதீட்டிய காரணத்தால் ,
பசி நேரங்களில் நம் கண் பார்த்தே
ஏம்பா ..சாப்பாடு கொண்டு வரலியா என வாஞ்சையோடு வினவி ஒரு பத்து ரூபாயை வலிந்து நம் கையில் திணித்து ஏதாவது வாங்கிச் சாப்பிடு எனக் கூறியோ அல்லது தான் கொணர்ந்த உணவில் பாதியை அன்புடன் நமக்கும் பகிர்ந்தளித்த தாயுள்ளத்தால் ...
தோல்வியில் முகம் வாடி கண்களில் நீர் கோர்த்து தனிமையில் வெறிக்க அமர்ந்திருக்கையில் அருகில் அமர்ந்து மெல்ல தலைதடவி , காரணம் கேட்டு சரி..சரி..கண்ணத் தொடைச்சுக்கோ .. அடுத்தமுறை பாத்துக்கலாம் என்று தைரியம்கூறும் ஒரு தந்தையைப் போன்ற கரிசனத்தாலோ ....இன்னும்..இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் நம் மனதில் நீங்கா இடம்பிடித்த நம் கனவுப் பருவ ஆசிரியர்களும்தானே ...!
அப்படி நமது ஒவ்வொருவருக்கும் ஒரு அல்லது சில கனவு ஆசிரியர்கள் இருப்பார்கள் ..நல்ல ஆசிரியர்களுக்கான ஒரு முன்னுதாரணமாக ...நல்லாசிரியர் விருதினைப் பெற்றிராவிட்டாலும்..
அதைப்பற்றிய எதிர்பார்ப்பே இல்லாமல்
தனது கல்விப் பணியை ஒரு தவமாகவே செய்து வாழ்ந்த அந்தப் பேரன்பர்களை நம்முள்ளிருந்து வெளிக்கொணர உதவும் நூல் இது .
இது ஒரு தொகுப்பு நூல் .
பிரபல எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை அசைபோட்டு ஒரு கனவு ஆசிரியர் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என தனது இதயத்தில் சிம்மாசனமிட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும்
தனது ஆசிரியர்களை உதாரண புருஷர்களாக முன்னிறுத்தும் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
அசோகமித்திரன்
பிரபஞ்சன்
பொன்னீலன்
தியடோர் பாஸ்கரன்
ஆர்.பாலகிருஷ்ணன்
ச.மாடசாமி
இரத்தின நடராஜன்
ச.தமிழ்ச்செல்வன்
பிரளயன்
பாமா
ஞாநி
ஆயிஷா நடராசன்
ஓவியர் டிராஸ்கி மருது
எஸ்.ராமகிருஷ்ணன்
த.வி.வெங்கடேஸ்வரன்
இறையன்பு
கீரனூர் ஜாகிர் ராஜா
பவா செல்லதுரை
ஆகிய பதினெட்டு பிரபலங்களின் அனுபவக் கனவுகளை பழக்கலவையாக்கியுள்ள
இந்நூலின் தொகுப்பாசிரியரான க.துளசிதாஸ் , அந்த அற்புதமான பழக்கலவையின் மேலாக தனது கனவெனும் இனிய தேனூற்றி நா ஊற வைப்பதோடு அதன் மேல் ஒரு செக்கச் சிவந்த செர்ரிப் பழத்தை மகுடமாக வைப்பது போல
இக்கட்டுரைத் தொகுப்பின் நிறைவாக
ஆபிரகாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தினை
ஒரு மகுடம் போலும் சூட்டி ஒரு அதி ருசி பொருந்திய ப்ரூட் சாலடை அழகான கண்ணாடிக் கிண்ணத்தில் ஸ்பூன் போட்டுத் தந்திருப்பது போன்று இந்த நூலை நம் கரங்களில் எடுத்துத் தந்துள்ளார்.
இந்நூலை வாசிக்கும்போது நிச்சயமாக நமது மனக்கண் முன் நமது கனவு ஆசிரியர்களும் வந்து செல்வதை தவிர்க்கமுடியாது.
குறிப்பாக ஆபிரகாம் லிங்கன் அவர்களின் அந்தக் கடிதம் நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் வாசித்தேயாகவேண்டிய ஒன்றாகும்.
இக்கட்டுரையாளர்களின் படத்துடன் அவர்கள் பற்றிய குறிப்புகளையும் அளித்திருப்பது கூடுதல் சிறப்பு .
இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு புது வெளிச்சம் கிடைக்கும் என நூலாசிரியர் நம்பிக்கை தெரிவிக்கிறார் தனது முன்னுரையில்.
எனக்கும் கூட அந்த நம்பிக்கையுண்டு ..
வாசியுங்கள் ...
ஆசிரியர்கள் மட்டுமல்ல ...!
ஒவ்வொரு மனிதருமே...!
ஏனெனில் ஒவ்வொரு பெற்றோரும்
தம் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர் ...!
ஒவ்வொரு மனிதரும் நிச்சயம் ஒரு பெற்றோர்...!
எனவே அனைவரும் இந்நூலை வாசியுங்கள் !
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 8 நாட்கள்

No comments:

Post a Comment