Sunday 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...10

எனது நட்பு வட்டத்தில் உள்ள ஆசிரியத் தோழமைகள் நிச்சயம் இதனை படிக்கவும் ,பிற ஆசிரியர்களோடு பகிரவும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்
சென்னை புத்தகத் திருவிழா -2019
ிறப்புப்பதிவு
நூல் அறிமுகம் - 10



இந்த நூல் பற்றிய அறிமுக உரைக்கு முன் எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழ் பெற்ற சிறுகதையான
#மரி_என்கிற_ஆட்டுக்குட்டி
(பள்ளிச் சூழல் சார்ந்த கதை) என்னும் படைப்பிற்கான அவரது முன்னுரையை இங்கு மேற்கோள் காட்டவேண்டியது அவசியமாகிறது .ஒருவகையில் இது அவருக்குச் செய்யும் எழுத்தாஞ்சலியும் கூட
ஒருவேளை அவர் இன்றைய மேல் நிலைப் பள்ளிச் சூழலில் தாமும் ஒரு ஆசிரியராக பணிபுரிந்து வந்திருந்தால் அவரது நிலைப்பாடு வேறாக இருந்திருக்கலாம் .
யானைகள் பிச்சை எடுக்கின்றன. கரடிகள் சைக்கிள் விடுகின்றன என்பது போன்ற விஷயங்கள் நடைமுறையான கருணை இல்லாத சமூகத்தில் வாழ்கிற நமக்கு, குழந்தைகள் சித்திரவதைப்படுகின்றன என்பது ஆச்சரியம் இல்லை.
கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் குழந்தைகளை அடக்கிச் சிறைப்படுத்திப் 'பாடம்' நடத்துகிற பள்ளிகள், ஆசிரியர்கள் அதற்குப் பிறகும் வீட்டுப்பாடம் கொடுத்துக் குழந்தைகளின் மாலைகளைக் களவாடுகிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் நிச்சயம் சொர்க்கம் போகமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஒரு மாபெரும் வாணலியில் அந்த ஆசிரியர்கள் விளக்கெண்ணையில் வறுக்கப்படுவார்கள் என்பதிலும்‌ எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூடக் கொடுக்கமுடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப்போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம்.
இதுதான் அந்த முன்னுரை .
இனி என்னுரை ...
பள்ளியில் பயில வரும் தம் இரண்டாம் குழந்தைகள் எனும் மாணவ சமுதாயத்தின் மேல் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் எனும் ஆசிரியர்கள் சமுதாயம்
வகுப்பறையில் காட்டும் வன்முறையின் மீதான பிரபஞ்சனின் பார்வையின் உள்ளக்குமுறல்களின் வார்த்தை வடிவங்கள்தான் இச்சிறு முன்னுரை .
மாணவர்களை அடித்தல் ,உதைத்தல் ,
மண்டியிடச்செய்தல் ,தோப்புக்கரணம் போடச்செய்தல் இன்ன பிற உடல்ரீதியான தண்டனைகள் ,அனைத்து மாணவர்முன் வசைமாரி பொழிந்து தலைகுனிய வைத்தல் ,உருவத்தை ,ஆடை அணியும் முறையை வைத்து அவர்களை எள்ளி நகையாடி மனம் நொறுங்கச் செய்தல் போன்ற மன ரீதியான தண்டனைகள் மட்டுமல்ல வன்முறை என்பது .வகுப்பில் மாணவர்களை நோக்கி ஏய் ..! பேசாத...!
கைய கட்டு ! அடச் சீ ...வாய மூடு ! கப்சிப்னு அமைதியா இரு! என்பதான வார்த்தைப் பிரயோகங்கள் கூட ஒருவகையில் அவர்கள் மீது நாம் காட்டும் வன்முறைதான் எனலாம் .
அப்படிப் பார்க்கப் போனால் இன்றைய பள்ளிச் சூழலில் பணிபுரியும் அனேகமான 99% ஆசிரியர்கள் பிரபஞ்சனின் சாபப்படி நரகம் பார்ப்பது நிச்சயம் .மீதமுள்ள ஒரு சதவிகிதம்பேர் உண்மையிலேயே தெய்வீகப் பிறவிகள்தாம்.ஒன்று அவர்கள் குழந்தைமையைக் கொண்டாடுபவர்களாக இருப்பார்கள்.இல்லை ஜென் நிலையில் ஜடமாகிப் போய் பள்ளிக்கு வந்து பணிபுரிபவர்களாக இருப்பர்.நிச்சயம் நான் இரண்டாம் வகையில் அடங்கமாட்டேன்.
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் ,தொடக்கப் பள்ளிகளில் பயிலும் பாலகர்கள் மேல் , சிரிக்கும் பூக்களின் மேல் இப்படிப்பட்ட வன்முறைகளைக் காட்டுபவர்கள் நிச்சயம் அரக்க மனம் படைத்தவர்களே ! அதில் ஐயமொன்றும் இல்லை .துரதிருஷ்டவசமாக அப்படியும்கூட சில ஆசிரியப் பெருந்தகைகள் உள்ளார்கள் என்பதனை பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் அதே நேரம் வளரிளம் பருவத்தினர் பயின்றுவரும் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையோ பரிதாபம்.
வயதின் காரணமாக , வளரும் சூழல் காரணமாக ,பழகும் நட்புச் சூழல் காரணமாக
வகுப்பில் அடங்காதிருக்கும் மாணவ மாணவியரை ,தேவையில்லாத சேட்டைகள் புரிந்து வகுப்பறைச் சூழலைக் கெடுப்பவர்களை ,சக மாணவர்களுக்கும், ஏன் சில சமயங்களில் ஆசிரியர்களுக்குமே
இடைஞ்சல் தரும் பேர்வழிகளையும் என்னதான் அடிக்காமல் குணமாக வாயால் சொன்னாலும் தறிகட்டுப்போய் மூர்க்கமாக ,முறைப்புத் தனமாக நடந்துகொள்ளும் மாணவர்களைக் கையாளத் தெரியாமல் ,அரசின் உத்தரவுக்கு பயந்து அல்லது கீழ்படிந்து கைகள் கட்டப்பட்டுவிட்டதாகப் புலம்பிக்கொண்டு எக்கேடும் கெட்டு ஒழியட்டும் ...நமக்கு ஏன் வம்பு என விட்டுவிட்டு தேமே என பாடத்தை நடத்திவிட்டு சம்பளத்தை வாங்கிக்கொண்டு நல்ல பிள்ளைகளாய்(!?) வீட்டிற்குச் செல்லும் ஆசிரியர்கள் ஒரு வகை .
மாணவர்கள் செய்யும் சேட்டைகளை ஆரம்பத்தில் சகித்துக்கொண்டாலும் போகப் போக சற்றே பொறுமை இழந்துபோய் பொறுத்துக்கொள்ள முடியாமல் இரத்த அழுத்தம் எகிறி ,வசைமாரி பொழிந்து அர்ச்சிப்பதும் ,அரசின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு என்ன ஆனாலும் பாத்துடறேன் ஒருகை என்று பிரம்பைக் கையில் ஏந்தி சம்பந்தப்பட்டவர்களையும் சில சமயங்களில் சம்பந்தமே இல்லாதவர்களையும்கூட வெளுத்துக்கட்டும்
ஆசிரியர்கள் இரண்டாம் வகை .சமயத்தில் இவர்களுக்கு பிரம்பும் தேவைப்படாது .தம் கரங்களே ஆயுதம் .( ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா ...பாக்கறியா...பாக்கறியா...?)
மூன்றாவதாக இன்னொரு ரகம் இருக்கிறது.
எதற்கெடுத்தாலும் தர தரவென்று மாணவர்களை தலைமை ஆசிரியரிடம் பிறர் பார்க்க பார்க்க இழுத்துச் சென்று அவரிடமே சார்...இவனுக்கு டிசி கொடுத்து துரத்துங்க சார்... இவனோட எல்லாம் மாரடிச்சு சாக முடியாது ஒன்னு இந்த ஸ்கூலுல இவன் இருக்கனும் ...இல்ல நான் இருக்கனும் ..என சத்தமிட்டு இரைந்து தலைமை ஆசிரியர் அறையே கலகலத்துப்போகும் அளவுக்கு பொறுமை இழந்துபோய் அலப்பறை செய்யும்
ஆசிரியப் பெருமக்களும் ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கத்தானே செய்வார்கள்...!
ஆக இந்த மூன்று வகையினருக்கும் இந்நூல் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்தான்.
21 ஆம் நூற்றாண்டின் தோழன் இந்நூல் என அறிமுகப் படுத்தும் பதிப்பகத்தார்
கல்வியாளர்கள் வழியே
தண்டனையில்லாத பயிற்றுமுறை
வன்முறையில்லாத வகுப்பறைநோக்கி
புதிய பாதை அமைக்கிறார்
ஆயிஷா நடராசன் என்று முன்மொழிவை வைத்துள்ளனர் பின் அட்டையில்.
அது உண்மைதான்.
குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்...?எனத்துவங்கும் முதல் அத்தியாயம் நம்மை உள்ளே பரபரவென விடை காணும் சிந்தனையோடு அழைத்துச் செல்கிறது .நீங்கள் குருவா ...? ஆசிரியரா என்னும் மூன்றாம் அத்தியாயத்து வினா நம்மைத் திகைப்படையச் செய்வதொடு அதே வினாவை எடுத்துக்கொண்டு நம்மை அகவெளிப் பயணம் அழைத்துச் சென்றுவிடுகிறது .
இருபத்தைந்து தலைப்புகளைக் கொண்டுள்ள இந்நூலில் அந்தத் தலைப்பகளெங்கும் வினாக்களாகவே விரவிக் கிடக்கின்றன.அவை ஒவ்வொன்றும் ஒரு சராசரி ஆசிரியரின் உள்ளத்திலே எழுந்து அடங்குபவையே .அவற்றிற்கு விடை கிடைத்துவிடுகிறது அந்தந்த அத்தியாய நிறைவில்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் சிறு முன்னுரையே போலும் ஒரு கல்வி சிந்தனையாளரின் பொன்மொழியும் அலங்கரிக்கிறது .
அவற்றுள் கல்வியாளர் கமலா முகுந்தாவின் வரிகள் நம்மை மனதோடு பளார் என ஒரு அறை விட்டுத் திகைக்கவைக்கின்றன.
அதே போல் தேவையான இடங்களில் மிக முக்கியமான புள்ளி விபரங்களையும் போகிறபோக்கில் அள்ளித் தெளித்திருப்பதில் நூலாசிரியரின் மெனக்கெடல் நன்கு தெரிகின்றது .
ஒன்று சொல்வேன். நிச்சயம் இந்நூலை வாசித்து உள்வாங்கியதும் ...நன்றாக கவனியுங்கள்....வாசித்ததும் அல்ல ...வாசித்ததை உள்வாங்கியதும் ...
நிச்சயம் இன்று புதிதாய் பிறந்தோம் என்று உணர்வீர்கள் ...
உமது வகுப்பறைச் சூழல் வசந்த காலங்களை வரவேற்கத் தயாராகிவிடும்...
உம் பள்ளி நுழைவு மாணவர்களின் வரவேற்புக் கொண்டாட்டமாகிவிடும்....
உமது குழந்தைகளின் வணங்கத்தக்க குருவாவீர்கள்...!
உமது மாணாக்கர்கள் செய்யும் வகுப்பறைக் குறும்புகளை மாலைகளாக்கி அணிந்து மகிழ்வீர்கள்....!
அவர்களது குடும்பச்சூழல் அவர்களது கண்களில் ஏற்படுத்தும் கண்ணீர் முத்துக்களை பன்னீர் முத்துகளாய் ஒற்றியெடுக்கும் பரிவான கைக்குட்டைகளாய் உமது கரங்கள் மாறிவிடும்....!
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயான கதிரோனைப் போலவே ,உமது பள்ளியில் பயிலும் அத்தனை மாணவர்களையும் பாசத்தோடு ,
வாஞ்சையோடு அரவணைக்கும் ஆயிரமாயிரம் மானசீகக் கரங்கள்
உமக்கு முளைத்துவிடும்
தேவதைகளின் வெண் சிறகுகள் போலவே ...!
குதூகலமான பேரிரைச்சல்கள் கேட்கும் மகிழ்ச்சி வகுப்பறைக்குள் வருக ...வருக ...ஆசிரியரே
என நம்மை வரவேற்று
வகுப்பு முடிந்து போகும்போது இதைவிட உற்சாகமான வகுப்பறையாக இதனை நீங்கள் கண்டிப்பாக மாற்றுவீர்கள் என்றும்
நம்பிக்கை தெரிவிக்கின்றார்.ஆயிஷா நடராசன் அவர்களின் அந்த நம்பிக்கை பொய்த்துப் போகாது என்பது நிச்சயம்.
வாழ்த்துகள் சார்.உங்களிடமிருந்து இதுபோல பல படைப்புகளை ஆசிரியர் சமுதாயமும் ,மாணவர் சமுதாயமும் ,கல்வியுலகமும் எதிர்பார்க்கின்றன.
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 13 நாட்கள் .

No comments:

Post a Comment