Monday 31 December 2018

திருநூலாற்றுப்படை - 18

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 18



ஓவியர்களுக்கும் ,ஓவிய ஆர்வமும் அது சார்ந்த தேடல் கொண்டவர்க்கும்
வரலாற்று ஆர்வலர்களுக்கும்,
பயண விரும்பிகளுக்கும்
தொல்பொருள் ஆர்வலர்களுக்கும்
ஆய்வு மாணவர்களுக்கும் இந்நூல்
ஒரு பெரு விருந்து.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ஆசிரியர் ஜோப் தாமஸ் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள தேசியக் கலைக்கூடத்தில் பணிபுரிந்தபோது
இந்தியக்கலை வரலாற்றால் ஈர்க்கப்பட்டவர்.
தற்போது அமெரிக்காவில் வடகரோலினா மாநிலத்தில் இயங்கிவரும் புகழ்பெற்ற டேவிட்சன் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்நூலை தமிழில் சுவை குன்றாது மொழிபெயர்த்து வழங்கியிருப்பவர் ஏஞ்சலினா பாமா பால் என்னும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்.
கலைகளில் சிறந்தது ஓவியம்.
தமிழகத்தில் பண்டைக்காலம் முதற்கொண்டே ஓவியக்கலை சிறந்து விளங்கியது.
ஆதிகால மனிதன் வாழ்ந்த குகை ஓவியங்கள் முதல் தமிழகமெங்கும் உள்ள ஆலயங்களின் சுவர்களிலும் ,
பிரகாரங்களிலும் ,விதானங்களிலும்
காணப்படும் கண்கவர் ஓவியங்கள் , சித்தன்ன வாசல் ,பனமலைப்பேட்டை ஓவியங்கள் உள்ளிட்டவை இதனைப்
பறைசாற்றியவண்ணம் உள்ளன.
ஓவியம் தீட்டுவதிலே சிறந்து விளங்கினான் என்பதற்காக மகேந்திர வர்ம பல்லவனுக்கு
' சித்திரகாரப்புலி ' என்ற பட்டம் வழங்கியிருந்தார்கள் என நாம்கூட வரலாற்றின் பக்கங்களில் வாசித்திருப்போம் அல்லவா ?
இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் இந்நூலாசிரியர் தான் முனைவர் பட்டம் பெறுவதற்காக வேண்டி மிக்சிகன் பல்கல்க் கழகத்தில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகளே ஆகும் .அவற்றையே மிக நேர்த்தியாக பலரது ஒத்துழைப்புடன் நேர்த்தியான நூலாக்கியிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள ஓவியப் பாரம்பரியம் மிகச் சிறப்பு உடையது;தொடர்ச்சியானது .
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலுமே இப்படியோர் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியத்தைக் காணவே இயலாது .
வரலாற்றுக்கும் முந்தைய காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டுவரை மிக நீண்ட பாதையில் பயணிக்கும் இந்த ஓவியப் பாரம்பரியமானது இதில் பயணிக்கும் நம்மையும் கால இயந்தித்தில் ஏற்றி ஒரு தீர்த்த யாத்திரைக்கே அழைத்துச் செல்கின்றது .
இந்த யாத்திரையின் போது தமிழகத்தின்
குடவரைக் கோயில் ஓவியங்களும் ,
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர் பெருமக்களால் எழுப்பப்பட்ட ஆலயத்தின் சுவரோவியங்களும் ,ஆவணக் காப்பகங்களின் களரிகளில் மறைந்துபோய்க் கிடக்கும் சித்திர அற்புதங்களும், அருங்காட்சியகங்களிலே
உறைந்துபோயிருக்கின்ற ஓவியமகோன்னதங்களும் நமக்கு தரிசிக்கக் கிடைக்கின்றன.
கி.மு 500 ஆண்டுக்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்த பாறை ஓவியங்களின் அறிமுக விவரிப்பில் துவங்குகின்ற இக்கட்டுரையானது முழுதுமாய் நம்மை அந்த காலத்துக்கே அழைத்துச் செல்கின்றது எனலாம்.
தமிழகப் பாறை ஓவியங்கள்
பழந்தமிழர் ஓவியங்கள்
பல்லவர் கால ஓவியங்கள்
பாண்டியர் கால ஓவியங்கள்
சோழர் கால ஓவியங்கள்
கலாச்சார மாற்றங்கள்
விஜயநகர கால ஓவியங்கள்
நாயக்கர் கால ஓவியங்கள்
மராத்தியர் கால ஓவியங்கள்
கிழக்கிந்தியக் கம்பனி கால ஓவியங்கள்
காலனி ஆதிக்க ஓவியங்கள்
என பதினொரு கட்டுரைகளாக வரலாற்றுக்
கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.
இக்கட்டுரைகளை வாசிக்கும்போதே
கொணவக்கரை, கரிக்கியூர் ,கீழ்வாலை ,
மாவடைப்பு ஆகிய இடங்களுக்கெல்லாம் நாமும் பயணப்படத் துவங்குகின்றோம் .
சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிவகாமி அம்மன் சன்னிதியின் சுவரோவியத்தை முகப்பு அட்டையில் தாங்கியுள்ள இந்தப் புத்தகம் பல அரிய ஓவிய வர்ணனைகளின் மலர்ச் செண்டாகவே காணப்படுகின்றது.
இடையிடையே பல வண்ண ஓவியங்கள் அடங்கிய, வழு வழு ஆர்ட் தாளில் அழகுற அச்சிடப்பட்ட நிழற் படங்களின் தொகுப்பு கூடுதலாய் கண்களுக்கு விருந்தாக அமைகின்றது எனலாம்.மேலும் புகைப்படமெடுக்க இயலாத பல சுவரோவியங்களின் அழகிய வரிவடிவங்கள் ஆங்காங்கே பக்கங்களை அலங்கரித்து நம்மை வசீகரிக்கின்றன;தொடர்ந்து வாசிக்கவும் தூண்டுகின்றன.இக் கோட்டோவியங்கள் அனைத்தும் தொல்லியல் துறையில் பணியாற்றிய திரு கிருஷ்ணசாமி என்பவரால் மிக நேர்த்தியான முறையிலே அழகுறத் தீட்டப்பட்டுள்ளன.இந்நூலின் அட்டையின் பின்புறம் திருப்பருத்திக்குன்றத்து சுவரோவியங்களைத் தாங்கியுள்ளது .
இந்நூலின் பின்னிணைப்பு பல கலை வரலாற்று ஆசிரியர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்டுள்ளது.தொடர்ந்து கால வரிசைப் பட்டியலையும் கொண்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பாகும்.
நூலை வாசித்து முடித்ததும் இதில் காணப்பட்ட ஓவியங்களைப் பற்றிய எண்ணங்கள் உமது மனதை ஆக்கிரமிப்பது மிக உறுதி .அதுமட்டுமல்லாது நீங்கள் உறங்கும்போது கனவிலும்கூட அச்சித்திரங்கள் தங்களைக் காண வருமாறு அழைப்பு விடுத்து இம்சை செய்யலாம். அடுத்ததொரு சித்திம் சார்ந்த கலைப் பயணத்திற்கு உமது கால்கள் பரபரக்கலாம்..!
ஆக இந்நூல் சித்திர உலகிற்கோர் தீர்த்தயாத்திரை ...!
நிச்சயம் வாசியுங்கள் ...!
யாத்திரை செய்யுங்கள் ...!
கவுன்ட் டவுன் - 4 நாட்கள்


No comments:

Post a Comment