Tuesday 25 December 2018

திருநூலாற்றுப்படை -12

புத்தகத் திருவிழா -2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் -12



நூலாசிரியர் தொ.ப என சுருக்கமாக அழைக்கப்படுபவர்.தமிழகத்தின்
முன்னனி ஆய்வாளர்களில் ஒருவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தற்போது பாளையங்கோட்டையில் வசித்துவருகிறார்.டிசம்பர் 2009ல் முதல் பதிப்பாக வெளிவந்த இந்நூல் ஆகஸ்டு 2017 ல் பதின்மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளதெனில் ஆய்வு வட்டத்திற்கு வெளியிலும் இந்த நூல் பெற்றுள்ள வரவேற்பை அறியலாம்.
சித்தன்னவாசல் குகை ஓவியங்களுள் ஒன்றைத் தன் மேலட்டையில் கொண்டிலங்கும் இந்நூல் , உள்ளேயும் ஆங்காங்கு சில கோட்டோவியங்களையும் கொண்டுள்ளது.
உள்ளே மொத்தம் ஏழு கட்டுரைகள்.
தமிழ் ,வீடும் வாழ்வும் ,
தைப்பூசம் ,பல்லாங்குழி,
தமிழக பௌத்த எச்சங்கள்,
பேச்சு வழக்கும் இலக்கண வழக்கம் ,
கறுப்பு என்பவை அவை .
ஒவ்வொரு தலைப்பின்கீழும் நாம் சற்றும் எதிர்பாரா துணைத் தலைப்பின்கீழ் நம்மோடு பல தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
உதாரணத்திற்கு முதல் அத்தியாயமான தமிழ் என்ற தலைப்பில் நாம் சற்றும் எதிர்பாராத, உணவைத் தொடுகிறார்.பருகும் தண்ணீர்,தமிழர் உணவு,உணர்வும் உப்பும்,உணவும் நம்பிக்கையும் எண்ணெய்,,பிச்சை ,தெங்கும் தேங்காயும்,உரலும் உலக்கையும்,சிறு தெய்வங்களின் உணவு என்ற துணைத் தலைப்புகளின்கீழ் பண்டைக்காலம் முதல் தமிழர்களிடையே உணவோடும் உணர்வொடும் , வாழ்வியல் முறையோடும் நெறியோடும் இரண்டறக் கலந்துவிட்ட பண்பாட்டு விழுமியங்களை நம் கண் முன் காட்சிப்படுத்துகிறது இவரது நடை.
உணவிற்கு வழங்கப்படும் பெயர்களின் காரணங்கள்,சங்க இலக்கியங்களில் கிடைக்கும் உணவுக் குறிப்புகள்,பழந்தமிழர் உணவுவழக்கம் ,மகப்பேற்றுத் தீட்டு , எங்கள் வீட்டில் இன்றளவும் அனுசரிக்கப்படும் செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாடு என்அழைக்கப்படும் ஔவையார் நோன்பு - இதில் படையலிடப்படும் உணவு வகைகள் ஆண்களின் கண்களில் படக்கூடாது என்ற காலம்காலமான நம்பிக்கைகள் என அனைத்தயும் தொட்டுச் செல்கிறார்.
அதேபோல் வீடும் வாழ்வும் என்ற தலைப்பின்கீழ் வீடு ,தோட்டம், தமிழர்தம் உடை ,நெசவு,உறவுப் பெயர்கள், பெயர்வைக்கும் முறைகள்,பெயர்க் காரணங்கள்,உறவு முறைகள், தாலியும் மஞ்சளும் ,சங்கும் சாமியும் ஆகிய தலைப்புகளை எடுத்துக்கொண்டு நாம் அறிந்திடாத பல தகவல்களை சங்க காலம்தொட்டு நிலவிவரும் நமது பண்பாடு ,கலாச்சார விழுமியங்களை -
ஆடைகள், அணிகலன்கள் , தாலியணிவது ,மஞ்ள்பூசிக்குளிப்பது,
ஆடைகள் நெய்வது,பாய் நெசவு , சங்கணிகள் ,சங்கின் வகைகளும் பயன்பாடும் என இன்றளவும் தொட்டுத் தொடரும் அத்தனை வழக்கங்களின் ஆணிவேர் வரை சென்று அவற்றின் ஆதியினை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்துகிறார்.
மற்றொரு அத்தியாயமான தைப்பூசம் என்ற தலைப்பில் ஏதோ வடலூரையும் ,வள்ளலார் பெருமானையும் ,தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களைக் கூறப் போகிறார் என உள் புகுந்தால் நமக்குக் கிடைப்பவை வேறு .பொங்கல் பண்டிகை முறைகள், தீபாவளியின் வரவு ,விநாயகர் வழிபாட்டு முறைகள், துலுக்க நாச்சியார்,மதங்கள், சாதிகள்,தமிழகத்தின் தொல்குடிகளான பறையர்,மத்தியானப் பறையர்,பண்டாரம் -இவர்களின் வாழ்வியல் ,பார்ப்பனர்களுக்கு முந்தைய பழைய குருமார்கள்,இசுலாமியப் பாணர்கள் என நமக்கு வெவ்வேறு செய்திகளை மாலையாக்கி அணிவிக்கிறார்.
பல்லாங்குழி என்னும் தலைப்பில் அந்த விளையாட்டை விளையாடும் முறை மட்டுமன்றி அதன் தாத்பர்யம் ,அடிக்கூறுகள் ஆகியவற்றைப் பட்டியலிடுகிறார்.மேலும் ,ஆடு புலியாட்டம் , தாயக் கட்டைகள் , சூதாட்டம்,எனப்போய் இன்றைய கலத்தில் நடைபெறும் சூதாட்டத்திற்கும் விளையாட்டுக்கும் உள்ள தொடர்பினை நையாண்டியோடு இடித்துரைக்கிறார்.மேலும் மகப்பேறற்றோர் தவிட்டுக்கு தத்தெடுத்துக்கொள்ளும் முறை ,எடுத்து வளர்க்கும் முறைகள் பற்றியும் பேசுகிறார்.துடுப்புக்குழிப் போடுதல் எனும் தலைப்பு மகப்பேற்றின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. இழவு வீட்டில் நடக்கும் ஒரு சம்பிரதாயமோ நம்மை திகைக்க வைக்கிறது .செம்பில் மூன்று முறை மலர்களிட்டு இறந்தவனின் மனைவி மூன்றுமாதக் கருவினை வயிற்றில் சுமந்திருப்பதை ஊருக்கு அறிவிக்கும் மூதாட்டியின் செயல்கள் அங்கு கூடியுள்ளோரை மட்டுமன்றி நம்மையும் அனுதாபப்பட வைக்கிறது. என்ன ஒரு பண்பாட்டு அசைவு !அத்துடன் கல்லறையைப் பற்றிய செய்திகளையும் தரத்தவறவில்லை ஆசிரியர்.
பௌத்தம், சமணம், நிர்வாணம்,சைவ மரபுக்கு மீண்டும் திரும்பிய திருநாவுக்கரசர், சித்தர்கள்,சித்தர் பாடல்கள் என பல சமயம் சார்ந்த தகவல்களை தந்துசெல்கிறார்.
நிறைவாக நிறத்தைக் கையிலெடுக்கிறார்.அதுவும் கறுப்பு நிறம்.அழகியல் சார்ந்து அந்நிறம் நம்மில் ஏற்படுத்திவைத்திருக்கும் தாக்கம் .சமூக முரண்கள் மனிதத் தோலின் நிறத்தைக் கொண்டு வெளிப்படுகின்ற வழக்கத்தை ஆராய்கிறது இக்கட்டுரை .கருப்பு நிறம், சிவப்பு நிறம் கொண்ட கடவுளர்கள் தொடங்கி சாதீய அடிப்படையிலான நிறங்களை அவர் அலசும் அலசலில் ஆண்டாண்டு காலங்களாக ஏறியுள்ள நம் மனதின் சாயமே நீங்கிவுடுகின்றது எனில் அது மிகையன்று.
இந்நூலின் முகப்புரையில் குறிபிடப்பட்டிருப்பது போன்று தொ.ப அவர்களிடமிருந்து தெறிக்கும் கருத்துகளும் சான்று மேற்கோள்களும் வாழ்ந்து பெற்ற பட்டறிவும் உண்மையிலேயே ஒரு வாசகரை மலைக்க வைப்பது நிச்சயம். நான் இன்னமும் அந்த மலைப்பிலிருந்து மீளவில்லை .
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 11 நாட்கள் .

No comments:

Post a Comment